புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1,714 ஆள் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தெலங்கானாவில் தலா 184 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான வழக்குகள் பெண்கள் கடத்தல் தொடர்பானவை ஆகும். பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடல் உறுப்புகளுக்காகவும் பலர் கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டு யாசகம் கேட்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஆள்கடத்தல் தடுப்பு தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதில் ஈடுபடும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உயர் நீதிமன்றங்கள் சார்பில் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இந்த கருத்தரங்குகளில் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளை பங்கேற்க செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கருத்தரங்குக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.