இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி உடைந்துள்ளது. முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் செயல்பட்டு வந்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் நிலவி வந்த நிலையில், கூட்டணி உடைந்துள்ளது. நிதிஷ்குமாருக்கு வலது கரமாக திகழ்ந்த ஆர்.பி.சிங்கை வைத்து ஆட்சியையும், கட்சியையும் உடைக்க பாஜக திட்டமிடுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டி வந்ததற்கிடையே, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ் குமார் அறிவித்தார்.
இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினார். அவர்களும் நிஷிஷ் குமாருக்கு ஆதரவளித்தனர். இதனால், பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் பீகார் முதலமைச்சரான நிதிஷ்குமார் 2017இல் திடீரென பாஜக கூட்டணிக்கு மாறினார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வரான அவர், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் பாஜகவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதற்கிடையே, பீகார் மாநில அரசியலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பீகார் அரசியல் நிலவரங்களை கவனித்து வருகிறேன். இந்த தருணத்தின் ஜனதாதள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இருந்த நாட்களை நினைத்துப் பார்க்க வைத்தது. ஜனதாதளம் கட்சியின் மூன்று பிரதமர்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது. எனக்கு வயது மூப்படைந்து விட்டது. ஆனால், இதுபற்றி இளைய தலைமுறையினர் முடிவு செய்தால் இந்த தேசத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை வழங்க முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் எதிரும்புதிருமாக இருக்கும் ஆர்ஜேடி – ஜேடியு ஆகிய கட்சிகள் 2015 தேர்தலில் கூட்டணி அமைக்க முக்கிய காரணமே பாஜக எதிர்ப்பு மனநிலைதான். அந்த தேர்தலுக்கு பின்னரும் கூட, நிதிஷ் குமார்தான் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். தற்போது, நிதிஷ் குமார் மீண்டும் வந்ததும் அவரை அரவணைத்து ஆட்சியை தக்கவைக்க உதவி புரிந்துள்ளனர் எதிர்க்கட்சி கூட்டணியினர். லாலுவின் ஆர்ஜேடி கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கும் போதும், ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ் குமாரையே முதல்வராக தொடர ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
பீகார் மாநில அரசியல் ஆர்ஜேடி – பாஜக என்று மாறி வரும் சூழலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஆர்ஜேடி அளித்துள்ள ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளும் முன்னொரு காலத்தில் இணைந்து பயணித்தன என்பதும், இந்த கட்சிகள் ஜனதாதள கட்சியில் இருந்து உடைந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
பலம் வாய்ந்த பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இதுகுறித்து, “பாஜகவை வீழ்த்த 1996 ஃபார்முலா: ஒன்றிணையுமா பிரிந்த கட்சிகள்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளீயிட்டிருந்தோம். அதில், பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தேசம் முழுவதும் பரந்துபட்டு கிடக்கும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமையும் பட்சத்தில் அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்று குறிப்பிட்டிருந்தோம்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே கருத்து, சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக பிரிந்ததுதான் ஜனதாதளம். காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், ஜனதா பரிவாரங்களை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை உருவாக்கி பிரதமரானார். அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ஜனதாதளம் உடைந்தது. அவைகள், ராஷ்டிரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் என்பன உள்ளிட்ட பல மாநிலக் கட்சிகளாக இருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவர்தான் முன்னாள் பிரதமர் தேவகவுடா. அவர்தான் தற்போது ஜனதாதள பரிவாரங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டது. அக்கூட்டணியில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து ஆதரவளித்தது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வெளியில் இருந்து ஆதரவளித்தன. ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவகவுடா பிரதமரானார். அதன்பிறகு, ஜனதாதளம் சார்பாக ஐ.கே.குஜரால் பிரதமரானார். 1996 முதல் 1998ஆம் ஆண்டுகள் இடையே தேவ கவுடா, ஐ.கே.குஜரால் ஆகிய இருவரும் ஜனதாதளம் சார்பாக பிரதமராக இருந்துள்ளனர். இதுபோன்று ஓரணியில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டால், 2024 தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயமாக நெருக்கடி கொடுக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.