சென்னை: ஐஎஃப்எஸ், ஆருத்ரா, திருச்சி எல்பின் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. ஐஎஃப்எஸ் நிதிநிறுவனம் ரூ.4,380 கோடியும், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125கோடியும் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த வாரங்களுக்கு முன்பு பிரபலமான முக்கிய நிதிநிறுவனங்களில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு சோதனை நடத்தியது. அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மற்றும் ஐஎஃப்எஸ் நிறுவனங்கள் மற்றும் அதன் கிளைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
வேலூர் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் ரூ.4,380 கோடி மோசடி செய்துள்ளது. ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மோசடி தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ரூ.4,380 கோடி மோசடி என்பது தற்போது சுமார் ரூ.6,000 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2,125 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் ஒரு பகுதியை வட்டியாக தந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. 93,000 வாடிக்கையாளர்களிடம் ஆருத்ரா கோல்டுக்கு நிறுவனம் முதலீடு பெற்றுள்ளது. நிதி மோசடி செய்துள்ள ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சி எல்பின் நிறுவனம் சுமார் ரூ.6,000 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறினார். 7,000 பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் நிறுவனங்கள் சொத்து வாங்கி குவித்துள்ளது. அவற்றை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. எல்பின் நிறுவனம் மோசடி தொடர்பாக 18 பேர் கைது செய்யப்ட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நிதி நிறுவன மோசடிகளில் பல நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், வங்கிகள் டெபாசிட்டாளர்களுக்கு 5.5 சதவீத வட்டிதான் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுபோல வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12% வட்டிதான் வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. மோசடி செய்த நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், அதிக வட்டி தருவதாக சொல்லும் திட்டங்கள் மோசடி திட்டங்கள். விழிப்புடன் இருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்ய கூடாது. 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக மக்களிடம் ஆசைவார்த்தை கூறி வருகின்றனர் எனவும் அறிவுறுத்தினார்.