MK Stalin speech highlights at Chess Olympiad closing ceremony: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது, இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன் என நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: சிவமணிக்கு டஃப் கொடுத்த ஸ்டாலின்: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா காட்சிகள்
இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் அகர்டி துவார்கோவிச், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் நடுவர்களும் இந்த நிறைவு விழாவில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு நிற உடையில், ஆளப்போறான் தமிழன் பாடல் பின்னனியில் மாஸாக மேடை ஏறினார். பின்னர் நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வெறும் நான்கே மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து, சிறப்பாக நடத்தியுள்ளோம். உலகமே மெச்சத்தக்க அளவில் தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மதிப்பு உயரும் என முன்பே கூறியிருந்தேன்.
சென்னையில் தங்கியிருந்த நாட்களை செஸ் வீரர்களும் பயிற்சியாளர்களும் மறக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தமிழகத்தின் கலாசாரம், வரலாறு, குறிப்பாக உணவு ஆகியவற்றை ரசித்திருப்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர்.
செஸ் விளையாட்டுப் போட்டி அதற்குள் முடிந்துவிட்டதா என ஏங்கும் வகையில் போட்டி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே, தமிழ்நாட்டுக்கு நீங்கள் எப்போதும் வரலாம். சென்னையை மறந்துவிட வேண்டாம். உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்.
செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். செஸ் ஒலிம்பியாட்டிற்கு பின் விளையாட்டுத்துறை முன்பை விட அதிக பாய்ச்சலுடன் செல்லும். எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றில் சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கபடி மற்றும் சிலம்பத்திற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும். சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil