பெங்களூரு : கர்நாடகாவில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசங்களில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஷிவமொகா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின் காச்சிகொண்டனஹள்ளி கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து, துாங்கி கொண்டிருந்த சுஜாதா, 55, என்ற பெண் உயிரிழந்தார்.ஷிவமொகாவின் பசவன கங்கூரு ஏரி நிரம்பி, கிராமத்துக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளது.
காபி தோட்டம் நாசம்
குடகு மாவட்டம், பாகமண்டலாவில் உள்ள பகண்டேஸ்வரா கோவில் உள்ளேயும், வெளியேயும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.அபாய மட்டத்தை மீறி சங்கமத்தில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. காபி தோட்டங்களில் புகுந்து, அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில காபி தோட்டங்களில், இரண்டடி, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் தேங்குகிறது.சிக்கமகளூரிலும் காபி தோட்டங்களில் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தும்பள்ளி கிராமத்தில் அப்பண்ண ஷெட்டி என்பவருக்கு சொந்தமான காபி செடிகள், மிளகு கொடிகள், பாக்கு மரங்கள் உள்ள தோட்டத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர் கவலை அடைந்துள்ளார்.
மீனவர்கள் அவதி
உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை நிற்காமல் வெளுத்து வாங்குகிறது. இரண்டு மாதங்கள் கழித்து தற்போது தான் மீன் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர் மழையால் அவர்களால் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நேற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.பெங்களூரு ஆனேக்கல் முத்யாலமடுவு அருவியில் ஒரு வாரமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஓசூர் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகமாக வருகின்றனர்.விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் உள்ள துங்கபத்ரா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணையில் இருந்து வினாடிக்கு 1.58 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணதேவராயா சமாதி
இதனால் கொப்பால் மாவட்டம், கங்காவதி அடுத்த ஆனேகுந்தி பகுதியில் உள்ள விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயா சமாதினா வெள்ளத்தில் மூழ்கியது.பல்லாரி மாவட்டம், கம்ப்ளி – கங்காவதி; ஹரப்பனஹள்ளியின் ஹலுவாகலு – கர்பகுடி; நந்தியாலா – நிட்டூர்; புக்காசாகரா – கடேபாகிலு உட்பட பல்வேறு ஆற்றுபாலங்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மூழ்கியது.சித்ரதுர்கா, விஜயபுரா, விஜயநகரா, பெலகாவி, கதக், பாகல்கோட், பல்லாரி, சிக்கபல்லாபூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement