கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவுபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் 11 நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் இதில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
சென்னையில் நடைபெற்ற நிறைவுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
லேசர் ஒளிவெள்ளத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், சிவமணி ட்ரம்ஸ் இசைக்க, ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க, ஸ்டீபன் கீபோர்டு இசைக்க, நவீன் புல்லாங்குழல் வாசிக்க ஜுகல்பந்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
நிகழ்ச்சியின் போது டிரம்ஸ் சிவமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகே சென்று அவரை டிரம்ஸ் இசைக்கச் செய்தார்.
பறக்கும் பியோனோ, பறக்கும் ட்ரம்ஸ் என்ற பெயரில் அந்தரத்தில் மிதந்தபடி இசைக்கருவிகளை கலைஞர்கள் இசைத்தது பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை பிரதிபலித்த காட்சிப்பதிவில் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுக்களும், கபடி மற்றும் கண்ணாமூச்சி போன்ற சிறார் விளையாட்டு மற்றும் பந்தாட்டம் குறித்த கலை நிகழ்ச்சிகளும் கண்களுக்கு விருந்தளித்தன.
சதுரங்க பலகையில் காய்களைப் போல் ராஜா, ராணி, சிப்பாய்கள் போன்று வேடமணிந்த கலைஞர்கள் நடித்துக் காட்டிய காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
சிறந்த ஆடை அணிந்ததற்கான விருது இந்தியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அங்கோலா அணிகளுக்கு வழங்கப்பட்டது. ஸ்டைலிஷ் அணி என்ற விருதை டென்மார்க் மகளிர் அணிக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் டிஜிட்டல் திரையில் காண்பிடிக்கப்பட்டது.
திரையிசைப் பாடல்களுக்கு கலைஞர்கள் ஆடிய நடனத்தால் நிகழ்ச்சி களைகட்டியது..
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி இறக்கப்பட்டு 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்த இருக்கும் ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.