காட்டுயானை தாக்கி முதியவர் சாவு

குடகு;

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா செட்டள்ளி அருகே மலக்கோடு கிராமத்தை சேர்ந்தவர் முகமது(வயது 65). இவர், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கண்டகரே அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று இரைதேடி வந்தது.

அப்போது காட்டுயானை, முகமதுவை பார்த்ததும் விரட்டி வந்தது. இதைப்பார்த்த அவர், காட்டுயானையிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் அவரை, காட்டுயானை பிடித்து தாக்கி தூக்கி வீசியது. இதில் முகமது பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காட்டுயானையை விரட்டி முகமதுவை மீட்டு சிகிச்சைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மைசூரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகமது பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது கிராம மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.