கால்கள்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அன்று… அந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் அரைநாள் விடுமுறை விட, ஏழாம் வகுப்பு சிறுவன் ஒருவன் மொட்டை வெயிலில் சாலையில் நடந்தபடி வருகின்ற இருசக்கர வாகனங்களில் எல்லாம் லிப்ட் கேட்டான்.

ஒரு வண்டிகூட நிற்காமல் சர்சர்ரென அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. அவன் நடந்தபடியே திரும்பி திரும்பி வண்டி வருகிறதா என்று பார்த்தபடி பயணிக்க…

ஒரு மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் ஸ்கூட்டி அவன் அருகே வந்தது. அவனோ அந்த நான்கு சக்கர மாற்றுத் திறனாளியின் ஸ்கூட்டியில் லிப்ட் கேட்பது தரக்குறைவானது என நினைக்க, அந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் அவன் மொட்டை வெயிலில் நடப்பதை பார்த்து அவனருகே ஸ்கூட்டியை நிறுத்தி, “எந்த ஊரு போகனும் தம்பி…” என்று கேட்க, சிறுவன் “பழனித்தோப்பு போகனும்க்கா…” என்றான்.

பள்ளி மாணவர்கள்.

பள்ளியிலிருந்து அந்த ஊர் பண்ணிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாற்றுத்திறனாளி இளம்பெண் நித்யாவோ இடையே பாதிவழியில் திரும்பும் இன்னொரு ஊருக்குள் செல்ல இருப்பவர்.

“சரி ஏறுப்பா… நான் கொஞ்ச தூரம் தான் போறேன்… அதுக்கப்புறம் நீ வேறவங்க வண்டில லிப்ட் கேட்டு போயிடு…” என்று நித்யா சொல்ல,

“ம் ஓகேங்க்கா…” என்று சிறுவன் அந்த மாற்றுத்திறனாளி ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தான்.

ஆன்’லயே இருந்த வண்டி, எக்ஸ்லேட்டரை முறுக்கியதும் மெல்ல நகர ஆரம்பித்தது. காற்று அவர்கள் இருவர்களின் தலைமுடியை கோதியது.

ஸ்கூட்டியை ஓட்டியபடியே, “பஸ்சுல கூட்டமா தம்பி…” என்று நித்யா கேட்க,

“ஆமாங்க்கா… இன்னிக்கு எதோ விசேஷ நாள் போல செம கூட்டம்… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பஸ்சுல தொங்கிட்டு போயி கால் தவறி கீழ விழுந்துட்டேன்… தலைல அடிபட்டு பதினோரு தையல் போடறமாதிரி ஆயிடுச்சு… அதான் கூட்டத்துல ஏறுல…” என்றான்.

“அச்சோ… பாத்து ஜாக்கிரதையா இரு தம்பி…” என்று அக்கறையாக சொல்லியபடியே ஸ்கூட்டியை ஓட்டினார் நித்யா.

நித்யா, மெயின் ரோட்டிலிருந்து தன் ஊருக்குப் போகும் டர்ன் அருகே வந்ததும் அவரது வண்டி திடீரென ஆஃப் ஆனது. செல்ஃப்பை அழுத்தி அழுத்தி அவர் ஸ்டார்ட் செய்து பார்க்க, வண்டி ஸ்டார்ட் ஆகவே இல்லை.

சிறுவன், “என்னாச்சுங்க்கா…” என்றபடி கீழே இறங்க,

“தெரில தம்பி… திடீர்னு மக்கர் பண்ணுது…” என்றார் நித்யா.

“பெட்ரோல் தீந்திருக்கும்ங்க்கா…” என்று சிறுவன் சொல்ல,

“நேத்து சாய்ந்தரம் தான் இருநூறூவாய்க்கு போட்டேன்… அதுக்குள்ள எப்படி தீந்திருக்கும்…” என்று குழப்பமாக கேட்க,

பின்னாடி பெட்ரோல் டாங்க் லாக் உடைந்திருப்பதை கவனித்தான் சிறுவன்

“அக்கா பெட்ரோல் டாங்க் லாக் உடைஞ்சிருக்கு… எவனோ பெட்ரோல் டாங்க் லாக்க உடைச்சு பெட்ரோல் திருடிருக்கான்…” என்று சிறுவன் சொல்ல, நித்யா அதிர்ந்து போய் முகம் வாடினார்.

ஸ்கூட்டியிலிருந்து இறங்கி காலை நொண்டியபடி வந்து வண்டி பின்னாடி பார்த்தார்.

ஆம் லாக் உடைந்திருந்தது. அதை பார்த்ததும் நித்யாவின் கண்கள் கலங்கியது.

“இந்த வண்டில கூட பெட்ரோல் திருடுறானுங்கன்னா அவனுங்களாம் மனுசனுங்களா…” என்று டென்சனாகி அவர்களை திட்டி நொந்துகொள்ள, சிறுவன் நித்யாவின் நிலையை கண்டு வருந்தினான்.

நித்யா தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஆண்ட்ராய்டு போனை எடுக்க, போன் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகியிருந்தது. உடன்பிறந்த அண்ணனின் நம்பர் மட்டும் தான் மனப்பாடமாக தெரியும். அந்த அண்ணனும் நேற்றுதான் வெளியூர் கிளம்பினார். ஆக, அவரை அழைக்க முடியாது. நித்யாவின் முகம் மேலும் வாடிப்போகி மேலும் கலங்கியது. சிறுவன் அவரது முகத்தை கவனித்தான்.

Representational Image

“இப்ப எப்படிங்க்கா நீங்க போவீங்க” என்று சிறுவன் கேட்க, “ப்ச்…” என்று சலித்து, “அதான் தெரில… தெரிஞ்சவங்க யாராவது வந்தா பெட்ரோல் வாங்கியார சொல்லலாம்… ஆனா கைல அவ்வளவு காசும் இல்ல… பெட்ரோல் பங்கும் இங்கருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு…” என்று வருத்ததுடன் பதிலளிக்க,

சிறுவன் அவரது முகத்தை சில நொடிகள் பார்த்துவிட்டு அவர் செல்ல வேண்டிய டர்ன்னை பார்த்தான். “நான் வேணா வண்டிய தள்ளிவிட்றேன்ங்க்கா…” என்று சிறுவன் சொல்ல,

“ஐயோ தம்பி வேணா… நீ உன் ஊருக்கு லிப்ட் கேட்டு போ… நா யாராயாச்சும் பிடிச்சு போயிக்குறேன்…” என்று நித்யா பதிலளித்தார்.

நித்யாவை அப்படியே விட்டுவிட்டு செல்ல, சிறுவனுக்கு மனம் வரவில்லை.

“பரவால உட்காருங்க்கா நா தள்ளி விட்றேன்…” என்று நம்பிக்கையுடன் வற்புறுத்தும் குரலில் அழுத்திப் பேச,

“இங்கருந்து ஏழு கிலோமீட்ரு தம்பி என் வீடு… இந்த மொட்ட வெயில்ல எப்படி தள்ளுவ… நிறைய வேகத்தட இருக்கு… மேடு பள்ளம் இருக்கு… ரொம்ப கஷ்டமா இருக்கும்…” என்று நித்யா சொன்னார்.

சிறுவன் சட்டென, “அக்கா நான் எதையும் கஷ்டம்னு நெனைக்குறது இல்ல… நீங்க உக்காருங்க மிச்சத்த நான் பாத்துக்குறேன்…” என்று சொல்லி நித்யாவின் கையை பிடித்து இழுக்க, நித்யா நொண்டி நொண்டி நடந்து ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்தார். நித்யாவுக்கு மனமே வரவில்லை.

“உனக்கு கஷ்டத்த கொடுக்கறன் தம்பி” என்று நித்யா சொல்ல,

“அதெல்லாம் ஒன்னுமில்ல…” என்று சொல்லி தன் ஸ்கூல் பேக்கை கழட்டி ஸ்கூட்டியின் முன்பக்கத்தில் வைத்தான்.

“ஆங்… போலாம் ரைட்…” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சிறுவன் வண்டியை தள்ள ஆரம்பிக்க, நித்யா மனதுக்குள் அந்த பெட்ரோல் திருடனை அசிங்கம் அசிங்கமாக திட்டினார்.

கொஞ்சம் தூரம் வேகமாக தள்ளிய சிறுவன் மெதுமெதுவாக தளர்ந்தான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் சக்தியை திரட்டி திரட்டி வண்டியை தள்ளியபடி ஓடினான்.

அவ்வாறு வண்டியை தள்ளியபடி ஓடத்தொடங்க அடுத்த சில நிமிடங்களில் அவன் செருப்பு அறுந்து போனது.

“உஸ்” என்று வருந்திய சிறுவன், நித்யாவுக்கு தெரியாதபடி இரண்டு செருப்புகளையும் அப்படியே சாலையில் கழட்டி விட்டபடி தொடர்ந்து ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு ஓடினான். அந்தச் சாலையோரம் மரங்கள் எதுவும் பெரிதாக இல்லாததால் சாலையில் வெயில் அப்பியது. சிறுவன் அதை பொருட்படுத்தாமல் சக்தியை திரட்டி திரட்டி வண்டியை தள்ளினான். நித்யாவுக்கு தன்னுடைய இயலாமையை நினைத்து அசிங்கமாக இருந்தது. அவரது முகத்தோல் சங்கடத்தில் நெளிந்து தவித்தது.

வண்டியை தள்ளியபடி, மரங்கள் பெயரளவுக்கு கூட இல்லாத அந்த சாலையின், வளைவான திருப்பங்களிலும், குண்டுங்குழிகளிலும், அடிக்கடி வந்த வேகத்தடைகளிலும் ரொம்ப சிரமப்பட்டு வண்டியை தள்ளியபடி ஓடினான். அவனது நெற்றியில் வியர்வை அருவியை வடிந்தது. சாலையில் வரிசையாய் அவனது வியர்வை விழுந்து வெயிலில் அது சட்டென மறைந்து போனது. அவனது சட்டை வியர்வையில் நனைந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஈரமானது. அவனை மேலும் சோதிக்கும் வகையில் வந்தது ஒரு செங்குத்தான மேடு. தொண்டை வறண்டு போக, வண்டியை மிக அதிக அழுத்தம் கொடுத்து தள்ளியபடி ஓடினான். அது மதிய நேர கிராமத்து சாலை என்பதால் பெரிதாக வாகனங்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அப்படியே சாலையில் வந்த ஒன்றிரண்டு பேரும் சிறுவனையும் நித்யாவையும் பொருட்படுத்தாமல் கடந்து சென்றனர். தம் பிடித்து கை கால்கள் நடுங்க சிறுவன் அந்த செங்குத்தான மேட்டில் வண்டியை தள்ள, நித்யா கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்திருந்தார்.

மேட்டை தொடந்து பள்ளம் வர, அப்போது வண்டியை தள்ள சிறுவனுக்கு கொஞ்சம் சுலபமாக இருந்தது. பேச்சு கொடுத்தால் மேலும் சிறுவனுக்கு மூச்சு வாங்கும் என்பதால் அமைதியாகவே இருந்தார் நித்யா.

Representational Image

“இன்னும் எத்தன கிலோமீட்ரு போகனும்ங்க்கா…” என்று சிறுவன் கேட்க,

“இதோ இதான் என் வீடு” என்று எதாவது ஒரு வீட்டை காட்டி பொய் சொல்லிவிட்டு, சிறுவனை அவன் ஊரைப்பார்த்து போக சொல்லலாம் என நினைத்தார் நித்யா. ஆனால் அப்படி செய்தால் ஒருவாய் தண்ணியோ ஜூஸோ கூட கொடுக்க முடியாது என்பதால் இவ்வளவு தூரம் வந்த சிறுவனை அசிங்கப்படுத்தியது போல் ஆகிவிடும். சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்து முறையாக உபசரித்து அனுப்புவதுதான் சரியென்று நினைத்தார் நித்யா.

சிறுவன் கேட்ட கேள்விக்கு “இன்னும் மூனு கிலோமீட்டருப்பா” என்று நித்யா பதில் சொல்ல, உடல் சோர்வடைந்த போதும் கூட “அவ்வளவு தானா…” என்று சொன்னபடி அவன் வண்டியை தள்ளியபடியே ஓடினான். தார்ச்சாலை வெயில் அவனது பாதங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகி போயிருந்தது. சிறிதும் மனம் தளர்வின்றி தள்ளிக்கொண்டே ஓடினான்.

மேகங்கள் காற்றில் மிதந்து மெல்ல மெல்ல பயணித்தது. ஆகாயத்தில் அதிக உயரத்தில், பறந்த கழுகு ஒன்று அந்தச் சிறுவனையும் நித்யாவையும் பார்த்தது. அவர்களை சுற்றி வட்டமடித்தது. ஆனால் அது சிறுவனுக்கும் நித்யாவுக்கும் தெரியவில்லை.

“முடிலனா நிறுத்தி நிறுத்தி ரெஸ்ட் எடுத்து எடுத்து போவலாம்டா தம்பி…” என்று நித்யா சொல்ல,

சிறுவன் வைராக்கியமாக, “என்னால முடியாததுனு எதுவுமில்லைங்க்கா…” என்று சொன்னபடி வண்டியை தள்ளிவிட்டான்.

ஒருவழியாக மிச்சமிருந்த மூன்று கிலோமீட்டர் கடந்தது. அரசு திட்டத்தில் கட்டிய வீடு வந்தது. அதுதான் நித்யாவின் வீடு.

“அப்பாடா… வீடு வந்துருச்சு தம்பி…” என்று சொல்ல, சிறுவன் வண்டியை தள்ளுவதை நிறுத்தினான்.

நித்யா ஸ்கூட்டியிலிருந்து கீழே இறங்கி, சிறுவனை பார்க்க… அவனது முகம் முழுக்க வியர்வை. அவனது சட்டையின் முன்பக்கமும், பின்பக்கமும் வியர்வையால் முழுவதுமாக நனைந்திருந்ததை கண்டு பேச்சற்று போன நித்யா, அவனது கால்களை பார்த்தார்.

வெறுங்காலுடன் இருக்கிறான் என்பதை பார்த்து அதிர்ந்து “டேய் தம்பி செருப்பு எங்கடா…” என்று கேட்க,

“வண்டிய தள்ள ஆரம்பிச்ச கொஞ்ச தூரத்துலயே அறுந்து போச்சுங்க்கா…” என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தான்.

“ஐயோ…” என்று பதறி,

“சரி உள்ள வாடா…” என்று முன்னே நொண்டி நொண்டி நடந்து அவனை தன் வீட்டிற்குள் அழைத்தார்.

சிறுவன் அவர் அழைப்பை ஏற்று, ஸ்கூட்டியிலிருந்து பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வெறுங்காலுடன் புக எத்தனிக்க,

“அக்கா கால கழுவுக்கிறேன்…” என்று சொல்லி பாத்ரூமை தொளவினான். ஓரமாக இருந்த பாத்ரூமுக்குள் சென்று வியர்த்திருந்த கைகால்கள் முகமெல்லாம் கழுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டிற்குள் ஒரு வயதான பாட்டி அமர்ந்திருந்தார். வியர்த்து நனைந்த சட்டையுடன் சிறுவன் வீட்டினுள்ளே நுழைவதை பார்த்த பாட்டியின் முகத்தில் ஒரு கடுகடுப்பு இருந்தது.

அந்தப் பாட்டி சிறுவனை பார்த்து, “இதாரு…” என்று கொஞ்சம் எரிச்சல் கலந்து சத்தமாக கேட்க,

“என் வண்டில எவனோ பெட்ரோல் திருடிட்டு போய்ட்டான்… மெயின் ரோட்டுல இருந்து இந்தப் பையன் தான் வண்டிய தள்ளிகிட்டு வந்தான்…” என்று சொல்லிவிட்டு, சமையல்கட்டிற்குள் சென்றார்.

டீ வைக்கலாம் என்றால் பால் குண்டாவில் சுத்தமாக பால் இல்லை. பாட்டி அடிக்கடி டீ வைத்து வைத்து குடித்து முடித்திருந்தார். வீட்டில் ஃபிரிட்ஜூம் இல்லாததால் ஐஸ்கட்டி வாங்கி வர, ஒரு கையில் குண்டாவையும் இன்னொரு கையில் சிறுவனுக்கு சொம்பில் தண்ணியும் கொண்டு வந்து கொடுத்தார் நித்யா.

“இரு தம்பி வரேன்…” என்று சொல்லிவிட்டு சாலைக்கு வந்து நொண்டி நொண்டி நடந்து பக்கத்து வீட்டில் ஐஸ்கட்டி கேட்டார்.

“இன்னிக்கு போட்டு வைக்கல…” என்று முதல் வீடு சொல்ல,

அடுத்த வீட்டில் குண்டாவை நீட்டி “ஐஸ்கட்டி கொடுங்க்கா…” என்று கேட்க “ஃபிரிட்ஜ் ரிப்பேரு…” என்று அந்த வீடு பதில் சொல்ல,

அடுத்தடுத்த வீடுகள் ஒவ்வொரு பதிலாய் சொல்ல, ஏழாவது வீட்டில் ஒருவழியாக ஐஸ்கட்டி கிடைத்தது. ஐஸ்கட்டி கிடைத்த மகிழ்ச்சியில், நித்யா குண்டாவை கையில் ஏந்தியபடி “கடவுளே ஐஸ்கட்டி கரஞ்சு போய்டக்கூடாதுப்பா…” என்று தனக்குத்தானே பேசியபடி வேகவேகமாக அந்த மொட்டை வெயிலில் நடந்தார். ஐஸ்கட்டி கரைவதற்குள் ஒருவழியாக வீடு வந்தடைந்த நித்யா, சிறுவனை பார்த்து புன்னகைக்க, பாட்டி நித்யாவை பார்த்து “ஏன்டி அறிவுகெட்டவளே” என்று திட்ட தொடங்கினார்.

Representational Image

நித்யா ஐஸ்கட்டி வாங்க சென்றிருந்த அந்த நேரத்தில் பாட்டியும் சிறுவனும் உரையாட தொடங்கினர்.

சேரில் அமைதியாக அமர்ந்திருந்த சிறுவனை பார்த்த பாட்டி, “தே… நீ எந்தூரு…” என்று பேச தொடங்கினார்.

“பழனித்தோப்புங்…” கொஞ்சமும் பயமும் மரியாதையும் கலந்த தொனியில் பதிலளித்தான் சிறுவன்.

“உங்கொப்பன் என்ன பண்றாப்லா…”

“அப்பா இல்ல…”

“உங்கொம்மா என்ன பண்ணுது…”

சிறுவன் சில நொடிகள் மௌனமாய் இருந்துவிட்டு,

“அம்மா ஜெயில்ல இருக்குது…” என்றான்.

அதைக்கேட்ட பாட்டி, முகத்தை அருவருப்பாக வைத்தபடி சிறுவனை மேலும் கீழுமாக பார்த்து, “விபச்சாரம் பண்ணாளா…” என்று கேட்டார்.

“இல்லங்… நகைய திருடுனதா பொய் சொல்லி அரெஸ்ட் பண்ணிட்டாங்… நான் இப்ப தாத்தா கூட தான் இருக்கேன்…” என்றான் அதே பயம் கலந்த தொனியில்.

பாட்டி அவனை மேலும் மேலும் அருவருப்பாக பார்த்த சமயத்தில் தான், நித்யா ஐஸ்கட்டியை சுமந்தபடி உள்ளே நுழைந்தார்.

*****

“ஏன்டி அறிவுகெட்டவளே… நீ பாட்டுக்கு இந்த பையன தன்னாப்பால வுட்டுட்டு போறியே… இவன் எதாவது தூக்கிட்டு ஓடிட்டானா நொண்டிக்கால வச்சுட்டு நீ துரத்திபிடிப்பியா… இல்ல குச்சி ஊனிக்கிட்டு நான் தொரத்தி புடிப்பனா…” என்று சொல்ல,

நித்யா கோபமாகி பற்களை நெறித்து “ச்சை… அமைதியா இரு…” என்று சொல்லி,

அவமானத்தால் கலங்கிபோன சிறுவனின் முகத்தை பார்த்து, அசடு வழிந்தார் நித்யா.

சமையலறைக்குள் நுழைந்து ஐஸ்கட்டி போட்டு லெமன் ஜூஸ் போட்டுவந்து கொடுக்க, சிறுவன் எச்சிலை விழுங்கியபடி வாங்கி மொடக் மொடக்கென குடித்தான். அவனது தொண்டையை கவனித்த நித்யா அவனது கால்களை பார்த்துவிட்டு சமையற்கட்டிற்குள் சென்று செல்ஃபில் உள்ள பேப்பருக்கு அடியில் கைவிட்டு காசு துளாவினார். பாத்திரங்களை எடுத்து திறந்து பார்த்தார். எதிலும் பணம் அகப்படவில்லை.

பாட்டியை பார்த்து, “பாட்டி இங்க வா…” என்று சமையற்கட்டிற்குள் அழைக்க, பாட்டி மெதுவாக எழுந்து அவளருகே சென்றார்.

“என்னடி…”

“உங்கட்ட எதாவது காசிருந்தா கொடு… அந்தப் பையனுக்கு கொடுத்தனுப்பலாம்…”

பாட்டி அவளை கொஞ்சம் கோபமாக பார்த்துவிட்டு சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்த ஒரு பழைய பத்து ரூபாய் தாளை எடுத்தார். அது அழுக்குப் படிந்து ஆங்காங்கே கிழிந்து போயிருந்தது.

“இந்தா இத கொடுத்து தாட்டிவுடு போவட்டும்…” என்று பாட்டி சொல்ல,

நித்யா கோபமாகி, “அடச்சை உனக்கும் அந்த பெட்ரோல் திருடனுக்கும் என்ன வித்யாசம்…” என்று கடிந்துகொண்டு நொண்டி நொண்டி நடக்க…

சிறுவன் ஜூஸை குடித்து முடித்து ஹால் சுவற்றில் மாட்டியிருந்த அன்னை தெரசா படத்தையும், நித்யா, தன் மாற்றுத்திறனாளி தோழிகளுடன் சாலையில் ஒருவரிடம் நிதி வசூலிப்பது போல எடுக்கப்பட்டிருந்த போட்டோவையும் பார்த்தான்.

நித்யா அவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு பெட்ரூமுக்குள் சென்று பெட்டை தூக்கிப் பார்க்க, அதற்கடியில் பெட்டிலிருந்து படிந்த மண்ணுக்கு நடுவில் ஒரு நூறு ரூபாய் தாள் இருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டு அந்த நூறு ரூபாய் தாளை எடுத்து நொண்டி நொண்டி நடந்து சிறுவனிடம் வந்து,

“இந்தாப்பா… செருப்பு வாங்கிக்கோ…” என்று நீட்ட,

“ஐயோ அக்கா காசெல்லாம் வேண்டாங்க்கா…” என்று சொன்னான் சிறுவன்.

அதை பார்த்தபடி இருந்த பாட்டி, “ஐயோ நூறு ரூவாய எடுத்து நீட்றாளே…” என்று சத்தமாக புலம்ப,

அதை சட்டை செய்யாத நித்யா வலுக்கட்டாயமாக அவனது பாக்கெட்டிற்குள் அந்த நூறு ரூபாய் தாளை திணித்தார். சிறுவன் பாட்டியை பார்க்க, பாட்டி அவனை முன்பு போலவே அருவருப்பு கலந்து முறைத்தார்.

“சரிங்க்கா… வரேன்…” என்று சொல்லிவிட்டு தன் ஸ்கூல் பேக்கை எடுத்து மாட்டிய சிறுவன், சட்டென அந்த வீட்டின் ஒரு ஓரத்திலிருந்த “மாற்றுத்திறனாளிகள் நிதி திரட்டும் பெட்டி” என்று எழுதியிருந்த பெட்டிக்குள் அந்த நூறு ரூபாயை திணித்துவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறி சாலையை நோக்கி ஓடினான்.

இவ்வளவு நேரம் அவனை அருவருப்பாகவும் கயவனாகவும் இளக்காரமாகவும் பார்த்த பாட்டியின் முகம் வெளுத்துப் போனது. சிறுவனின் கையால் பளாரென அறைவாங்கியது போல் உணர்ந்தார் பாட்டி.

நித்யா சிறுவனின் அச்செயலை கண்டு எச்சிலை விழுங்கிவிட்டு நொண்டி நொண்டி நடந்து வந்து சாலையில் நிற்க, வெயில் அப்பும் அந்த சாலையில் வெறுங்காலுடன் ஓடிக்கொண்டிருந்தான் சிறுவன். “டேய் தம்பி நில்றா…” என்று நித்யா பலமுறை அவனை அழைக்க, அவன் ஒருமுறை கூட திரும்பி பார்க்காமல் பொடிசுட சுட ஓடிக்கொண்டிருந்தான்.

நித்யா அவனது கால்களையே பார்க்க, வளைவான சாலையில் அந்தக் கால்கள் மெல்ல மெல்ல ஓடி மறைந்து.

அந்தச் சாலை மிக அமைதியாக இருந்தது. அந்தச் சாலையையே பார்த்துக் கொண்டிருந்த நித்யா,

அந்தச் சிறுவனை துரத்தி பிடித்து,

“ஸாரி டா… தம்பி” என்று சொல்ல முடியவில்லையே என நினைத்து தனது கால்களை வெறுப்பாக பார்த்தார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.