வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையின் உள்ள மட்டக்களப்பில், முழுதும் இலவச சிகிச்சை அளிக்கும் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையை ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை துவக்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை சார்பில், இலங்கையில் மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக, ஸ்ரீ சத்ய சாய் கருணாலயம் மருத்துவ மையம், 2017ல் துவக்கப்பட்டது. இதுவரை, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையம் சார்பில் மட்டக்களப்பில், ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
ஆன்மீக குருவான சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் இதை திறந்து வைத்தார். இங்கு, முதல்கட்டமாக, 75 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு அனைத்து சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பும் ஒன்று. அங்கு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விதவைகள் உள்ளனர்.தற்போது நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குரியது. சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்த மருத்துவமனை அமைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement