சீனாவிடம் கடன் பெறும் வளரும் நாடுகளுக்கு வங்காளதேச நிதி மந்திரி எச்சரிக்கை

டாக்கா,

ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (The Belt and Road Initiative) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும்.

இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வளரும் நாடுகளுக்கு சீனா கடனளித்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் கடன் வழங்கும் முறையை வங்காளதேசத்தின் நிதி மந்திரி முஸ்தபா கமல் விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சீனா தனது கடன்களை மதிப்பிடுவதற்கு மிகவும் வலுவான செயல்முறையை பின்பற்றுகிறது. ஒரு திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வளரும் நாடுகள் சீனாவின் இத்திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.