சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ வெண்கலம் வென்றது. இந்த அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணி’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணி’ என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.