தெறிக்க விட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆடிப்போன அதிகாரிகள்!

போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணைப் போனால் சர்வாதிகாரியாக மாறுவேன் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில், போதைப் பொருட்கள் குறித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

குஜராத், மகாராஷ்ராவை விட தமிழகம் போதைப் பொருட்களை கடத்தலில் குறைவு என்பது ஆறுதல் ஆக இருக்கிறது. போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க, நம் அனைவரும் முன்வர வேண்டும். போதைப் பழக்கத்தை தடுக்காவிட்டால், எதிர்காலம் பாழாகி விடும். மாவட்ட கலெக்டர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுக்கெனத் தனிக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு, அதில் பள்ளி மற்றும் மாணவர்களை இணைத்து

விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் இருக்கிறது. இதனை நுண்ணறிவுக் காவல் துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருள் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் முக்கிய கடமை; போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்; இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.

இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத் தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு – குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. NDPS சட்டத்தில் உள்ள 32B (a) பிரிவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், அப்படியொரு நிலைமைக்கு என்னையோ அல்லது உங்களையோ உங்களின்கீழ் உள்ள அதிகாரிகள் தள்ளி விடமாட்டார்கள், அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று இன்னமும் நம்புகிறேன்.

நமக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு, போதைப் பொருள் அறவே கூடாது. அந்த இலக்கை நோக்கி அனைவரும் நடைபோடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.