பூவிருந்தவல்லி அருகே உள்ள இரண்டு கிராம மக்கள் தாங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறோம் எனத் தெரியவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் அடங்கியது செம்பரம்பாக்கம் ஊராட்சி. 1999-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஊராட்சி இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் உள்ள பாப்பான்சத்திரம், பழஞ்சூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு மட்டும் வருவாய் துறை காஞ்சிபுரம் மாவட்டத்திலும், வாக்குரிமை, கல்வி தொடர்பான சான்றுகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இந்தப் பகுதி மக்களுக்கு பட்டா, சாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று என அரசு சேவைக்கு கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் அலைக்கழிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தீர்வுக் காணப்படவில்லை. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கிராமத்தில் உள்ள பாப்பான்சத்திரம், பழஞ்சூர் கிராமத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தருமாறு செம்பரம்பாக்கம் ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். பூவிருந்தவல்லி அடுத்த குமணன்சாவடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்கள் சிரமத்தை எடுத்துக்கூறினர்.
இது குறித்து ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் மாவட்ட பிரச்னைக்காக போராடி வருகிறோம். தற்போது வரை தாங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறோம் எனத் தெரியவில்லை. எனவே இரண்டு கிராமத்தையும் திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இதுவரை அனைத்து துறைக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதும் அமைதி வழியில் போராடி வருகிறோம். நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்டமாக இரண்டு கிராம மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெறும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM