டெல்லி: இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று நாடு திரும்பிய தமிழ்நாடு வீரர் சரத்கமலுக்கு டெல்லியில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய டேபிள் டென்னிஸின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சரத்கமல். நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரராக களமிறங்கி பல்வேறு பதக்கங்களை பெற்று அசத்தினார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்கமல், நாட்டுக்காக பதக்கங்கள் வென்றது டேபிள் டென்னிஸ்க்கே பெருமை என்று கூறினார். கடந்த சில ஆண்டுகளாகவே விளையாட்டுக்கு முக்கியத்துவம் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடர்ந்து ஆதரவு தருகிறது. ஒன்றிய அரசும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தொடர்ந்து விளையாட்டு பயிற்சி எடுத்தால் அனைவரும் சாம்பியன் ஆகலாம். மனைவி, 2 குழந்தைகளின் தியாகமும் எனது வெற்றிக்கு காரணம். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.