நிதிஷ் பாணியில் பாஜகவை கழற்றி விடுவாரா இபிஎஸ்?

பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ்:
பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் உறவை முறித்துக் கொண்டுள்ள நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ள தரமான சம்பவம் பிகார் மாநிலத்தை தாண்டி தேசிய அரசியலில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

கூட்டணியில் இருந்து கொண்டே ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் வேலையில் பாஜக இறங்கியதுதான் அதனை கழற்றிவிடுவதற்கு காரணம் என்று நிதீஷ் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளதால்தான் பிகார் அரசியல் அந்த மாநிலத்தையும் தாண்டி, தேசிய அளவில் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிவசேனாவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கியதை போல, ஐக்கிய ஜனதா தளத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கும் பாஜகவின் முயற்சியை நிதீஷ் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். அவரது பாணியை பின்பற்றி எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிடுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது.

அதிமுகவை டம்மி ஆக்கும் முயற்சி:
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் நான்கு இடங்களில் வெற்றிப் பெற்ற பாஜக, ஆளும் திமுகவை வலுவாக எதிர்ப்பவர்கள் என்ற முறையில் தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று மார்த்தட்டி வருகிறது. இது 60 பிளஸ் எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை மக்கள் மன்றத்தில் டம்மி ஆக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக என்றிருக்கும் தமிழகத்தின் இருதுருவ அரசியலை திமுக, பாஜக இடையேயான அரசியலாக மாற்ற நினைக்கும் பாஜகவின் எண்ணத்தின் வெளிப்பாடே என்ற எதிர்க்கட்சி கோஷம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

வேடிக்கை பார்க்கும் பாஜக:
இதைவிட முக்கியமாக, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, இபிஎஸ் அன்கோவுக்கு எதிராக ஒபிஎஸ் அணியினர் தர்மயுத்தம் நடத்தி வந்தபோது இருதரப்பினரையும் அழைத்து ‘ஒத்துமையா இருங்க’ என்று சமாதானம் செய்து வைத்த பாஜக, இன்று இபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ள அதிமுகவை கூட்டணி கட்சி என்ற முறையில் ஒருங்கிணைக்க முயலாமல், அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்று சர்வசாதாரணமாக கூறி வுருகிறது.

இதன் மூலம், அதிமுகவின் தயவில் தமிழகத்தில் காலுன்றிவிட்ட பாஜக வேரூன்ற வேண்டுமென்றால், அதிமுக பிளவுப்பட்டு இருப்பது நல்லதுதான் என்று எண்ணுவதாகவே, அக்கட்சி உடனான பாஜகவின் தற்போதைய அணுகுமுறை பார்க்கப்படுகிறது.

இபிஎஸ் பிடிவாதம்:
அதிமுக எப்போதும் போல் ஒற்றுமையாகவே இருக்க வேண்டும் என்றுதான் பாஜக விரும்புகிறது. ஆனால், இபிஎஸ்தான் இனி ஓபிஎஸ் உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். அவர் இப்படி பிடிவாதமாக இருக்கும்போது பாஜக என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கு, கூட்டணி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ளவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை டெல்லி, சென்னை என எந்த இடத்திலும் தம்மை பார்த்து பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்காமல் அலட்சியப்படுத்துவது ஏன் என்ற எதிர்கேள்வியை முன்வைக்கின்றனர் இபிஎஸ் ஆதரவாளர்கள்.

பாஜக விரும்புவதை போல அதிமுகவை எப்போதும்போல் ஒன்றாக இருந்து வழிநடத்தினால் நடத்துங்கள்… இல்லையென்றால் உங்களின் எந்த விளக்கத்தை கேட்க மோடியோ, அமித் ஷாவோ தயாராக இல்லை என்ற மெசேஜைதான் இபிஎஸ்ஸை நிராகரிப்பதன் மூலம் பாஜக சொல்ல வருகிறதா? இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரத்தை உட்கட்சி பிரச்னை என்று சொல்லிவிட்ட பிறகு, இரண்டு பேரையும் சமமாக வைத்து பார்க்காமல், ஒப்பீட்டளவில் இபிஎஸ்ஸை பாஜக தள்ளிவைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

போதாகுறைக்கு, இபிஎஸ் அன்கோவின் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் திடீரென தற்போது சூடுபிடிப்பதன் உள்அர்த்தம், பாஜக மேலிடத்தின் ஆசி இபிஎஸ்சுககு இனி இல்லை என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.

முந்திக் கொள்வாரா இபிஎஸ்:
இப்படி அலட்சியம், புறக்கணிப்பு, ரெய்டு பயம் என இத்தனைக்கும் பிறகு கூட்டணியில் பாஜகவை வைத்திருப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல. பிகாரில் நிதிஷ் குமார் பாஜகவை கழற்றிவிட்டதை போல, எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட வேண்டும். இல்லையென்றால் நாளடைவில் சசிகலா அல்லது ஓபிஎஸ் அல்லது ரஜினியின் கைக்கு கூட அதிமுக போகும் நிலை வரக்கூடும். அதற்கான வேலைகளில் பாஜக இறங்கவும் வாய்ப்புள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கின்றனர் அரசியல் விவரம் அறிந்தவர்கள். அரசியலில் முந்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்… பார்ப்போம்… இபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்கின்றனர் அவர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.