புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் 93-பி செக்டாரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ உள்ளது. இங்கு வசிக்கும் பாஜக பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகி, அண்மையில் தனது பகுதியில் மரக்கன்று நடும்போது அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தியாகி அப்பெண்ணை தரக்குறைவாக பேசியதுடன் தாக்கவும் செய்தார். இது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஸ்ரீகாந்த் தியாகியை தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார் நேற்று காலையில் மீரட் நகரில் தியாகி மற்றும் 3 பேரை கைது செய்தனர்.
முன்னதாக தியாகியின் மனைவியிடம் போலீஸார் நேற்று 2-வது முறையாக விசாரணை நடத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தாக்கப்பட்ட பெண்ணின் வீட்டை கேட்டு குடியிருப்பு வளாகத்தில் தியாகியின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் 6 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் ஸ்ரீகாந்த் தியாகி தலைமறைவானதால் அவரது வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர்.