புதுடெல்லி: புதிய விதிகள் மூலமாக பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய வன பாதுகாப்பு விதிமுறைகள், பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வாழும் மற்றவர்களை பாதிக்கும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. இந்நிலையில், சர்வதேச பழங்குடியினர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற லாபத்திற்காக புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை கொண்டு வந்து பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு சதி நடக்கிறது. சர்வதேச பழங்குடியினர் தினத்தில் பழங்குடியின மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசு நண்பர்களாக இருக்கும் ஒரு சில முதலாளிகளுக்காக மட்டும் செயல்படுகிறது என்பதை குறிக்கும் வகையில், ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற வார்த்தையை ராகுல் பயன்படுத்தி வருகின்றார்.