புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று மத்தியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். மக்கள் ஆதரவு பெருகியதால் பல்வேறு மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைக்க பாஜக தலைமை விரும்பியது. இந்தப் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் இருந்தது.
இதன் காரணமாக பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக கூட்டணி அரசில் லேசான விரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சரவையில் ஜேடியு சார்பில் 2 கேபினட், 2 இணையமைச்சர் பதவிகள் கோரப்பட்டன. ஆனால் ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் ஜேடியு தலைமையின் ஒப்புதல் பெறாமல் ஆர்.சி.பி.சிங் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் ஜேடியு, பாஜக கூட்டணி இடையிலான விரிசல் அதிகரித்தது.
கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் கடந்த 2020-ல் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் ஓரணியாக போட்டியிட்டன. எனினும் ஜேடியுவின் செல்வாக்கை சரிய வைக்க பாஜக ரகசியமாக வியூகம் வகுத்தது. இதற்கு என்டிஏவில் அங்கம் வகித்த லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார்.
என்டிஏவிலிருந்து வெளியேறாமல் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லோக் ஜன சக்தி தனித்துப் போட்டியிட்டது. அந்தக் கட்சி பாஜகவை எதிர்க்கவில்லை. ஜேடியு போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் லோக் ஜன சக்தி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக ஜேடியுவின் வாக்கு சதவீதம் குறைந்து அந்த கட்சிக்கு 43 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
தேர்தலுக்குப் பிறகு லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 80 இடங்களுடன் முதலிடத்தையும் பாஜக 77 இடங்களுடன் 2-ம் இடத்தையும் பிடித்தன. 43 எம்எல்ஏக்களுடன் ஜேடியு 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இது முதல்வர் நிதிஷ் குமாரின் கோபத்தை அதிகரிக்க செய்தது.
பிஹாரில் பாஜக, ஜேடியு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு பாஜகவின் ஆதிக்கம் மேலோங்கியது. அந்த கட்சியை சேர்ந்த 2 துணை முதல்வர்களும், அமைச்சர்களும் தன்னிச்சையாக செயல்பட்டனர். முதல்வர் நிதிஷின் எதிர்ப்பை மீறி பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா சபாநாயகராக நியமிக்கப்பட்டார், அவர் நிதிஷுக்கு ஆதரவாக செயல்படவில்லை. பாஜக தலைவர்களின் எதிர்மறையான செயல்பாடுகள், முதல்வர் நிதிஷின் அதிருப்தியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்தது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாட்னாவில் அண்மையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா, பிஹாரின் 243 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு திரட்ட பாஜக நடத்திய கூட்டத்தில் சிராக் பாஸ்வான் அழைக்கப்பட்டார். இது நிதிஷின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
கூட்டணியில் நீடித்தாலும் சிஏஏ, என்ஆர்சி, அக்னி பாதை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள், திட்டங்களுக்கு முதல்வர் நிதிஷ் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் நடத்திய இப்தார் நிகழ்வில் அவர் பங்கேற்று பாஜகவை பகிரங்கமாக மிரட்டினார். இதன் உச்சமாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, லாலுவுடன் இணைந்து பிஹாரில் புதிய கூட்டணி அரசை நிதிஷ் அமைக்கிறார்.