பெங்களூரு : ”தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள் பா.ஜ.,வினர். அவர்களிடம் நாட்டுப்பற்றை எதிர்பார்க்க முடியாது,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.காங்கிரஸ் சார்பில் பெங்களூரு குயின்ஸ் சாலை கட்சி அலுவலகத்தில், நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.
மாநில தலைவர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் உட்பட முக்கிய பிரமுகர்கள், மகாத்மா காந்திக்கு மலர் துாவி வணங்கினர்.பின், சித்தராமையா பேசியதாவது:சுதந்திரத்தை வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது, மும்பை மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி துவக்கினார். அப்போது காந்தி உட்பட ஒரு லட்சத்துக்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் நம்மை ஆண்டனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வினரும் அவர்களின் அடிமைகளாக இருந்தனர். பா.ஜ.,வினர் வீடுதோறும் தேசிய கொடி நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.ஆனால், ஆர்.எஸ்.எஸ், புனே அலுவலகத்தில் 52 ஆண்டுகளாக தேசிய கொடி ஏற்றப்படாமல் இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேல் வர்க்கத்தினர், கீழ் வர்க்கத்தினரை அடக்கி ஆண்டனர்.தேசிய கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள் பா.ஜ.,வினர். அவர்களிடம் நாட்டுப்பற்றை எதிர்பார்க்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில காங்., தலைவர் சிவகுமார் பேசியதாவது:வெள்ளையனே வெளியேறு என்று, 80 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி போராட்டம் நடத்தினர். தற்போது பா.ஜ.,வினரே அதிகாரத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காந்தியின் பிள்ளைகளாக நாம் குரல் எழுப்போம்.நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில், அரசியல் விரோதம் காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.,வினர் தொந்திரவு கொடுக்கின்றனர். நாட்டில் எமர்ஜென்சி போன்ற சூழ்நிலை நிலவுகிறது.சுதந்திரத்துக்காக லட்சக்கணக்கான காங்கிரசார் சிறை சென்றனர். பலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். உதய்பூரில் பிரமாண்டமான பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை ஒட்டி, மகாத்மா காந்தி உருவ படத்துக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மலர் துாவினார். இடம்: கட்சி அலுவலகம், குயின்ஸ் சாலை, பெங்களூரு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement