காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 3ஆம் தேதி அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் 2 மாதங்கள் இடைவெளியில் அவருக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மீண்டும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளாது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த முறை மிதமான அறிகுறிகளே இருப்பதாக பிரியங்கா காந்தி கூறியிருந்தார். தற்போது தொற்றின் நிலவரம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக மட்டுமே தெரிவித்துள்ளார்.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022
கடந்த ஜூலை 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதியானது. மறுநாளே பிரியங்கா காந்தி தனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதாகத் தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்றால் சோனியா காந்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் அண்மையில் தான் விசாரணைக்கு ஆஜராகினார்.
பேரணி, தொற்று: கடைசியாக விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய பேரணியில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அந்தப் பேரணியின் போது அவர் வலுக்காட்டாயமாக கைது செய்யப்பட்டார். பேரணி முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி ராகுல் காந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.