“பிளவுகளைக் கடந்து நிச்சயம் அ.தி.மு.க ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும்” என்று மதுரை வந்த வி.கே.சசிகலா தெரிவித்தார்.
அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளரும், முதல் எம்.பி-யுமான மாயத்தேவர் நேற்று காலமானார். அவருக்கு அஞ்சலில் செலுத்த சின்னாளப்பட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வி.கே.சசிகலா இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“புரட்சித் தலைவர் அ.தி.மு.க-வை தொடங்கிய சிறிது காலத்திலேயே… திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேச்சை சின்னத்தில் வெற்றி பெற்றவர்.
கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர், அவருடைய இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன்” என்றார்.
அதையடுத்து அவரிடம், தற்போது அ.தி.மு.க பிளவுப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அ.தி.மு.க ஒன்றிணையும், அ.தி.மு.க வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்” என்றார்.