பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பு; துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி

பாட்னா: பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் பதவியேற்ற பின்னர் பேசிய நிதிஷ் குமார், “2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சியினர் கொடுத்த அழுத்தத்தாலேயே முதல்வரானேன். ஆனால், கட்சியினர் முந்தையக் கூட்டணியில் என்ன மாதிரியாக ஒடுக்கப்பட்டனர் என்பதை நீங்களே பார்த்தீர்கள். நான் உங்கள் அனைவரிடமும் கடந்த இரண்டு மாதங்களாகவே பேசவில்லை. 2015-ல் நாம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இப்போது நாம் எந்த எண்ணிக்கையில் இருக்கிறோம் என்று பாருங்கள்” என்றார். எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் மற்றும் பாஜகவின் அரசியல் வியூகத்தை சாடிப் பேசினார்.

கூட்டணி முறிந்ததன் பின்னணி: கடந்த 2020-ஆம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தான் அவாம் கட்சி 4, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றின.

தேர்தலுக்குப் பிறகு விகாஸ் ஷீல் இன்சான் கட்சியின் 3 எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்தக் கட்சியின் பலம் 77 ஆக உயர்ந்தது.

எதிரணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர். ஒரு தொகுதி இடைத்தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் பலம் 80 ஆக உயர்ந்தது.

நிதிஷ் ராஜினாமா: ஜே.டி.யு. பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், இன்று அவர் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.