டெல்லி அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி ஆட்சியை இருமுறை கைப்பற்றி தேசிய அளவில் கவனம் பெற்றது ஆம் ஆத்மி கட்சி.
ஊழலுக்கு எதிரானவர்கள் நாங்கள் என தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டவர்களை டெல்லி மக்கள் வரவேற்றது போல் பஞ்சாப்பிலும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். எனவே இரு மாநிலங்களில் அக்கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் பேசப்பட்டாலும் பிற மாநிலங்களின் தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டு வந்தாலும் தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துவிடவில்லை.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பு அக்கட்சியினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்து விட்டால் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளார். அத்துடன், “டெல்லி மற்றும் பஞ்சாபை தொடர்ந்து, ஆம் ஆத்மி இப்போது கோவாவிலும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்தால் அதிகாரப்பூர்வமாக தேசிய கட்சியாக அறிவிக்கப்படுவோம். ஒவ்வொரு தன்னார்வ தொண்டரின் கடின உழைப்பிற்காக நான் வாழ்த்துகிறேன். ஆம் ஆத்மி சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப், கோவா தேர்தல்களை தொடர்ந்து ஆம் ஆத்மி தற்போது குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மோடி அடிக்கடி குஜராத சென்று வருகிறார். முக்கிய நிகழ்ச்சிகளை குஜராத்தில் நடத்துகிறார். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் டெல்லியிலிருந்து அடிக்கடி குஜராத் சென்று வருகிறார். அந்த தேர்தலில் ஆம் ஆத்மி தாக்கத்தை ஏற்படுத்தினால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.