மாமியார் வழியில் சபரீசன்; பாஜகவால் வந்தது பலே சிக்கல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். முதல்வர் ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மிகவாதியாக உள்ளார்.

இந்த நிலையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் போலவே அவரது மருமகன் சபரீசனும் கோயில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக நாட்டம் உள்ளவராகவே அறியப்பட்டு வருகிறார்.

அந்தவகையில் அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற சபரீசன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது சபரீசன் கோயிலில் யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது.

“உதயநிதி அப்புறம் இன்பநிதி” பொருத்தமான பெயர் – இபிஎஸ் விமர்சனம்!

இதற்காக, திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் வள்ளி குகை நடைபாதை மறிக்கப்பட்டு சபரீசனுக்கு இடம் வழங்கப்பட்டதாகவும், இதனால் அதிகாலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் கால்கடுக்க காக்க வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தகவல் அறிந்து, பாஜக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அறநிலைய துறையிடம் புகார் அளித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று, திருச்செந்தூர் பஸ் நிலையத்தின் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக குவிந்தனர்.

அப்போது எந்த அனுமதியும் இல்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினர்.

இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சபரீசனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தொண்டர்கள் பயங்கர கோஷம் எழுப்பினர்.

இதை அடுத்து போலீசாரும் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அதிரடியாக கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் மருமகன் என்ற போதிலும், சபரீசன் இதுவரையில் அரசு சலுகைகளை அனுபவித்தது இல்லை என்றே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோயில் நிர்வாகத்தின் கடைக்கண் பார்வையால் யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்காக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கிளம்பி இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டு பாஜகவுக்கு அல்வா துண்டாக அமைந்துள்ளதாகவே பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.