மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் மாயத்தேவர். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர். திமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கியபோது அவருடன் இணைந்து பணியாற்றினார்.
அதிமுக தொடங்கிய பிறகு 1973-இல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் முதன்முதலாக மாயத்தேவரை எம்ஜிஆர் போட்டியிட வைத்தார். அப்போது தான் மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்தார். அதுவே பின்னாளில் அதிமுக-வின் அசைக்க முடியாத சக்தியாகவும், பட்டி தொட்டியெங்கும் உள்ள அதிமுக தொண்டர்களின் மனதில் நிலைத்துவிட்டது.
1977-இல் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். இதையடுத்து அதிமுக-வில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அதிலிருந்து விலகி திமுகவில் இணைந்து 1980-இல் எம்பி ஆனார். பிறகு உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகி சின்னாளபட்டியில் உள்ள வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவரின் இல்லத்தில் உயிரிழந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் அவரின் உடலுக்கு அஞ்சலிச் செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு சின்னாளபட்டியில் இறுதிசடங்கு நடக்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வரும் ஓ.பி.எஸ் அங்கிருந்து சின்னாளபட்டி வந்து மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதேபோல சசிகலா சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து சின்னாளபட்டி வரவுள்ளார்.
இதுகுறித்து சின்னாளபட்டி அதிமுகவினரிடம் பேசினோம். “எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் மாயத்தேவர். அரசு வழக்கறிஞராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் அதை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறினார். ஒருமுறை கெங்குவார்பட்டியில் அதிமுக கூட்டம் நடந்தபோது மாயத்தேவர் வர தாமதம் ஆனது. அப்போது எம்.ஜி.ஆர், `மாயன் வரட்டும் அதன்பிறகு தொடங்கலாம்’ என்று காத்திருந்தார். டெல்லியில் அதிமுக-வின் செல்வாக்கை அதிகப்படுத்தியவர் மாயத்தேவர்.
ஒருமுறை எதிர்க்கட்சியினர் இந்திராவை தாக்குவோம் எனக் கூற, `தொட்டுப்பாருங்கள் டெல்லியே ரத்தவெள்ளத்தில் மிதக்கும்’ எனக் கர்ஜித்தார். யாரிடமும் கை நீட்டி பழக்கிமில்லாதவர் என்பதால் தவறு நடக்கும் இடத்தில் கோவத்தைக் கொட்டித்தீர்ப்பார். பின்னாள்களில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் இணைந்து செயல்பட்டார்” என்றனர்.