மின்சார திருத்த மசோதா (2022) நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மசோதா தாள்களை தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான ஷிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
இதற்கிடையில் ட்விட்டரில், ‘மின்சார திருத்த மசோதா ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். நடைமுறையில் உள்ள எந்த மின் சலுகைகளையும் பறிக்காது” என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், “இத்தகைய கேவலமான வடிவமைப்புகள் மூலம் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க பார்க்கிறது” என்றார்.
2022 திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?
பஞ்சாப் மின்வாரிய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் அஜய்பால் சிங் அத்வால் கூறுகையில், “இந்த மசோதா மாநிலத்தின் சட்டவிதி 42க்கு எதிராக உள்ளது. இது தனியாரை அனுமதிக்கிறது. இதன்மூலம் தனியார் நிறுவனங்கள் உரிமம் பெற்று மின்சாரம் பெற முடியும்” என்றார்.
மேலும் மின்சார சட்டத்தின் 14ஆவது பிரிவிலும் திருத்தம் செய்ய மசோதா அனுமதிக்கிறது” என்றார்.
முpனசார திருத்த மசோதா ஏர்டெல், வோடபோன் போன்று மின்சார நிறுவனத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கிறது.
மசோதா எதிர்பாளர்கள் கூறும் தாக்கம்
இந்த மசோதா அமலுக்கு வரும்பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் வருமானம் உள்ள இடங்களில் மின்சார விநியோகத்தில் ஈடுபடுவார்கள். இதனால் ஓட்டுமொத்தமாக சேவை பாதிக்கப்படும்.
இதனால் அரசு நிறுவனங்கள் மேலும் நஷ்டத்தில் இயங்கும். இது அரசுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பட்டியல் 3, பிரிவு 38இல் மின்சாரம் குறித்த வரையறை வருகிறது. இது மின்சாரத்தில் மத்திய- மாநில அரசுக்கு பங்கு உண்டு எனக் கூறுகிறது.
இதனால் மாநில அரசுகளின் உரிமை பறிபோகும். இது ஒரு கூட்டாட்சி மீறல். மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் எனக் கருதுகின்றனர்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மின் மானியங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மேலும் மாநிலத்தில் குடும்பம் ஒன்றுக்கு இரண்டு மாதத்துக்கு 600 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 61 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இதன்மூலம் ரூ.1800 கோடி மானியம் அளிக்கப்படுகிறது.
மேலும் பல்வேறு மின்சார விநியோகர்கள் இருக்கும்பட்சத்தில் மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்றும் மசோதா எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அத்வால் அளித்த விளக்கம் ஒன்றில், “இதுபோன்ற தவறான கொள்கையை இங்கிலாந்து அரசு அமல்படுத்தியது. இதனால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நுகர்வோர் சிலர் மின்சார தேவைக்கு 2.6 பில்லியன் பவுண்டுக்கு மேல் செலுத்தினர். மின்மீட்டரை மாற்றியமைக்கவும் பெரிதளவு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.
இந்தத் திட்டம் தோல்வி என்றபோதிலும் நுகர்வோர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். எனவே மின்சார திருத்த மசோதாவை (2022) எந்த வித விவாதமும் இன்றி நிறைவேற்றக் கூடாது. இந்த விவாதம் மின்துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புடனும் இருத்தல் வேண்டும்” என்றார்.
2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மின்சார சட்ட திருத்த மசோதா 2014ஆம் ஆண்டுவரை பலமுறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 2022 திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.