சினிமாத்தன பரபரப்புக்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை என்பதை அடக்கமாகச்சொல்லிக்கொண்டிருந்தது அமைதியை அணிந்திருந்த அந்த வீடு. ‘மகனுக்கு தேசிய அவார்டு கெடச்சிருக்கு! ஆனா உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!” கொஞ்சம் சூடாகவே கேட்கிறேன்.
“சந்தோஷம் இருக்கத்தான் செய்றது அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” – பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் D. சீனிவாசன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/5155.jpg)
காந்தீயவாதியான நீங்க இந்த வெற்றியை ஏழைகளுக்குத் தர்மம் செஞ்சி கொண்டாடினா பொருத்தமா இருக்கும் இல்லியா?”
“நல்ல ஐடியா யோசிக்கிறேன்!”வழக்கறிஞரல்லவா? நாக்கில் ஸ்கேல் வைத்துக் கொண்டு பவ்யமாய், கவனமாய் வார்த்தைகளைப் பிரசவிக்கிறார்.
“கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் இந்த மாதிரி அவார்டுகளைப் பற்றி என்ன நெனக்கிறீங்க?”
“இதுல பாலிடிக்ஸ் விளையாடுறதுனால அவார்டுகளுக்கு மதிப்பில்லாம போயிச்சே!”
“அப்படின்னா கமலுக்குக் கிடைச்சிருக்கிற இந்த அவார்டும் நீங்க சொல்ற மாதிரி…”
“இந்தக் கேள்விய நீங்க கேட்டதற்கே நான் வெட்கப்படுறேன்.”
“வெரி வெரி சார்! உங்க மகன் திறமையில உங்களைவிட எங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு”அவருடைய மெல்லிய இதயத்தின் மேன்மையைப் புரிந்து கொண்ட நான் சுதாரித்துக் கொண்டேன்.“இந்த அளவுக்கு சூப்பர் ஸ்டாரா வருவார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?”
“நிச்சயமா! நேத்துகூட ‘Oh my boy, you deserve oscar’ னுதான் அவனுக்கு ‘தந்தி’ அடிச்சேன்!”
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/4243_ad_13458.png)
தாய், தந்தை, சகோதரியுடன் கமல். . .”இந்தப் பெருமைலே கமலை வளர்த்து ஆளாக்கிய உங்க பங்கு பற்றி . . .”
“கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு . . .முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். பெரிசா சொல்லிக் கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடல . . .” அடக்கமாக நழுவிய அவரை விடவில்லை நான்.
“சிறுசா சொல்லிக் கொள்ற அளவுக்காவது இருந்திருக்கணும்லே?”
“சினிமாத்துறைலே பெரிய கலைஞனாகப் பேர் எடுக்கணும்கறத்துக்காக அவனுக்கு எல்லா விதமான பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்துல என்கிட்டே வந்து, “நீங்க சொன்ன மாதிரி வாய்ப்பு வரலேயே”ன்னு அடிக்கடி வருத்தப்படுவான். அப்போதெல்லாம் அவன் மனச் சோர்வுக்கு டானிக் கொடுத்து உற்சாகம் ஊட்டுவேன். ‘நான் தேய்ந்து அழிவனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன்’ என்ற வாசகத்தைத் திருப்பித் திருப்பி நினைவுபடுத்துவேன். அவனோட உணர்வுகளப் புரிஞ்சிக்கிட்டு, என்னைவிட அதிகமா அவனுக்கு ஆதரவு கொடுத்த என் மனைவிக்குத்தான் இந்த பெரும் பங்கு உண்டு” என்று சொல்லும் போது, மகிழ்ச்சி கலந்த சோகம் அவர் முகத்தில் பரவுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/http___photolibrary_vikatan_com_images_gallery_album_2016_01_21_257866.jpg)
“கமல் வளர்ச்சியில உங்க மனைவிக்கு பெரும் பங்கு உண்டுன்னு சொல்றீங்க! ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வர முடியுமா?”
“எங்க குடும்ப நண்பராய் நெருங்கிப் போயிருந்த டி.கே. சண்முகத்தின் நாடகத்துல அவன் நடிச்சிட்டிருந்த நேரம். ஹாஸ்பிடலில் ஆபத்தான கட்டத்தில் இருந்த என் மனைவி என்னைக் கூப்பிட்டு, ‘நான் சாகறதுக்கு முன்னால டி.கே. சண்முகத்திடம் கொஞ்சம் பேசணும்! அவரு வீட்டுல கொண்டு போய் என்னை விட்டுடுங்க’ன்னு கெஞ்சினா. ஒரு டாக்சியில் கொண்டு போய் விட்டேன்.
‘அய்யா! நாங்க பணக்காரங்க தான்! ஆனாலும் உங்க நாடகக் குழுவுல இருக்கிற ஏழைகளோட ஒரு ஏழையா என் மகனையும் சேத்துக்குங்க! நீங்க சரின்னு சொல்லிட்டா நான் நிம்மதியா உயிர் விடுவேன்’னு சண்முகத்திடம் சொன்னாள் என் மனைவி.
உடனே அவர், ‘கவலப்படாதீங்கம்மா! உங்க பையன் இனி என் நாடகக் குழுவுல ஒருவன் மட்டுமல்ல, என் குடும்பத்திலேயும் ஒருவன். என் பிள்ளைகளுக்கு என் சொத்துல எவ்வளவு கெடைக்குமோ அதே அளவு அவனுக்கும் உண்டுன்னு உருக்கமாச் சொன்னார்.”
” ‘அவார்ட் கெடைச்சதுல கமல் அப்பாவைவிட அதிகமா நான் சந்தோஷப்படறேன்’னு கே. பாலசந்தர் சொல்லியிருந்தாரே! படிச்சீங்களா?”
“படிச்சேன்! உடனே கே.பி-க்கு ஒரு லெட்டர் எழுதிப் போட்டேன்.”
“என்ன எழுதியிருந்தீங்க?”
” ‘நீங்க சொல்லியிருப்பது உண்மைதான். என்னைவிட அதிகம் நீங்க சந்தோஷப்படுவதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது’ன்னு எழுதினேன்.”ஆரம்ப காலத்துல கே.பி-யின் நாடகத்துல அவனை நுழைக்கிறதுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினோம்! முடியாமப் போயிடிச்சி! ஜெமினிதான் அவரிடம் திருப்பித் திருப்பி பிரஸ் பண்ணி அரங்கேற்றத்துல சான்ஸ் வாங்கிக் கொடுத்தாரு!”தன் மகனின் இந்த வளர்ச்சியில் கே.பி-யின் ரோலைப் பற்றி குதூகலத்துடன் நிறையவே பேசுகிறார் டி.எஸ்.
“கமல் சின்ன வயசுல புத்திசாலித்தனமான குறும்புச் சேட்டைகளை நிச்சயம் பண்ணியிருப்பாரு! நினைவுப்படுத்திப் பார்க்க முடிகிறதா?”
தயக்கமில்லாமல் தொடர்கிறார்.. “எங்க வீட்டுக்கு யாரு வந்தாலும் அவர்களின் ஆக்டிவிட்டீஸ் உன்னிப்பா கவனிப்பான். அவங்க போன பிறகு அதே மாதிரி செய்து காட்டுவான். போரடிக்கிற நேரம் நானும் என் மனைவியும் அவனைப் பக்கத்தில் இருத்தி, இந்த ‘மிமிக்ரி’ செய்யச் சொல்லி ரசிப்போம்!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/9876.jpg)
“இங்குள்ள எனது நண்பரின் தியேட்டரில், டிக்கெட் கிழிக்கும் ஊழியரிடம் போய், ‘நான் எம்.ஜி.ஆராக்கும். என்னை உள்ளே விடறியா? இல்லாட்டி… டிஷூம். டிஷூம்’னு கையக் கால உதைப்பான்.
“விவரித்ததோடு, கமலைப் போல அருமையாக நடித்தும் காட்டுகிறார். ஒரு புலியைப் பெற்ற புலிதான்! சந்தேகமில்லை.
“நடிகைகளைக் கிண்டல் பண்ணுவதில் கில்லாடின்னு பேர் வாங்கியிருக்கிறாரே! உங்ககிட்டே அப்படி எப்போதாவது…”
”ஸ்டாரா ஆனதுக்கப்புறம் என்னே நேருக்கு நேர் சந்திக்கிறதைக் கூடிய மட்டும் அவாய்ட் பண்ணுவான்.”
“உங்ககிட்டே அவ்வளவு பயமா?”
“அப்படித்தான்னு நான் நெனைக்கிறேன்.”
“சரி. . . கமலோட கல்யாணத்தப் பத்தி உங்க அபிப்ராயம் . . .”
“இந்த விஷயத்துல நான் ஒரு கன்ஸர்வேடிவ்தான்!”
“அப்படின்னா இந்தத் திருமணத்துக்கு எப்படி நீங். . .?’’
“சினி பீல்டுல நுழைஞ்சிட்ட அவனுக்கு, இது தவிர்க்க முடியாமெ போயிடுச்சுன்னு உணர்ந்ததனால எதிர்ப்புத் தெரிவிக்கல. அதே நேரத்துல ஆதரவும் கொடுக்கல.
“சற்று சிந்தித்து விட்டுத் தொடருகிறார்:”அவனுடைய கல்யாணம் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்த நேரம்… மெட்ராஸுக்குப் போயிருந்தேன். ‘அப்பா! நான் ஸ்டுடியோவுல நடிக்கிறத நீங்க பார்க்கவேயில்லையே! இன்னிக்கு என் ஷூட்டிங் பார்க்க வாங்க’ன்னு கூட்டிட்டுப் போனான்!”
மலையாள படத்தின் தமிழாக்கம் என்று நெனைக்கிறேன். மேஜரும் புஷ்பலதாவும் அவனுக்குப் பெற்றோர்.
காதலி ஜரினா வஹாப்பைக் கூட்டிக் கொண்டு ஆசீர்வாதம் வாங்க வருகின்றான். மேஜர் ‘டேய், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எவளோ ஒருத்தியை இழுத்துக்கிட்டு வந்து எங்ககிட்டேயே ஆசீர்வாதம் கேட்கறே?’ன்னு கோபத்துல கத்துகிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/4870.jpg)
“இந்தக் காட்சி ஓகே ஆனவுடன் அவனைக் கூப்பிட்டு, ‘டேய், வாணியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கொடுங்கன்னு நேரடியா கேக்க வேண்டியதானே! இப்படியா என்னைக் கூட்டி வந்து.. ‘ன்னு சொன்னவுடன் என் எதிரில் நிற்காமல் ஓடிப் போய் விட்டான்.
”அடுத்த ஷாட்டுக்கு அவனைத் தேடினார்கள். ஆளைக் காணோம்! ஜரினா வஹாப் தனக்கு நேரமாயிடிச்சின்னு அவசரப்படுத்தினாள். எரிச்சலடைந்த டைரக்டர் வில்லியம், ‘ஹீரோயின், ஹீரோவக் காணல! உங்களுக்கு அவசரம்னா அதோ நிக்கிறாரே… கமல் அப்பாவோடு நடிங்க’ன்னாரு. உடனே நான், ‘வில்லியம்! கிண்டலா பண்றீங்க! இந்தக் கிழவியோட நடிக்க எனக்குச் சம்மதமில்லே’ன்னு சொன்னேன். செட்டில் இருந்த எல்லோரும், ஜரின வஹாப் உட்பட சிரிச்சிட்டாங்க..”
”காந்தி படம் பாத்தீங்களா?”
“பார்த்து ரொம்ப ரசிச்சேன்! தமுக்கம் மைதானத்துல நேர்ல பார்த்த காந்திக்கும் படத்துல வர்ற காந்திக்கும் எந்தவொரு வித்யாசத்தையும் என்னால கண்டுபிடிக்க முடியல…
”படம் பார்க்கும்போது கமல நெனச்சீங்களா?”
“ஆமா! அவன் நேரு படத்துல நேருவா நடிக்கணும்னு ஆசையும் பட்டேன்.”உள்ளத்தை ஒளிக்காமல் திறந்து காட்டுகிறார்!
” கமல்கிட்டே உங்களுக்குப் பிடிச்ச அம்சம் எது?”
“சினி பீல்டுல நுழையறப்போ, ‘மது, புகையிலை, மாது – இந்த மூணுக்கும் இடம்கொடுக்க மாட்டேன்’னு பிராமிஸ் பண்ணித் தரச் சொன்னேன். முதல் ரெண்டுக்குத்தான் சம்மதிச்சான். ஆனாலும் அன்னிக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்னும் காப்பாத்திட்டு வர்றதை நெனச்சு சந்தோஷப்படறேன்.”
“மது குடிக்க மாட்டாரா?” என் ஆச்சரியத்தை அகலப்படுத்துகிறேன்.
“பலமாகத் தலையசைக்கிறார்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/3687_as_13510.jpg)
“திறமையான கலைஞனை உருவாக்கியிருக்கின்ற இன்டெலக்சுவல் ஃபாதர் என்ற முறையில் கேட்கிறேன், ஸைக்கலாஜிக்கலி குழந்தைகளை எப்படி வளர்க்கணும்?”
“குழந்தை கருத்தரித்த நிலையிலேயே வளர்ப்புப் பணியை ஆரம்பிச்சிடணும்கிறதுதான் என் கருத்து. கர்ப்பமாயிருக்கின்ற காலத்துல தாயின் உள்ளுணர்வுகளைப் பொறுத்தே குழந்தைகளின் வளர்ச்சி அமைகிறது. குழந்தைப் பருவத்திலே அவர்களின் டேஸ்ட் என்ன என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, ‘இப்படித்தான் இவனை உருவாக்க வேண்டும்’ என்று திட்டமிட்டு, நம்பிக்கையோடு வளர்த்து வந்தால் நாட்டுலே ஜீனியஸ் பஞ்சத்தைப் போக்கிடலாம்.
“வழக்கறிஞர் குழு ஒன்று ஆளுநர் குரானாவைச் சந்தித்தபோது இவர், ‘ஐ’ம் சீனிவாசன்! அட்வகேட் அட் பரமக்குடி-ன்னு சொன்னாராம்! பக்கத்திலிருந்தவர், ‘கமலஹாசன் ஃபாதர்’னு கிசு கிசுத்தவுடன், கவர்னர், ‘ஓ, யூ ஆர் கமல்ஸ் ஃபாதர்?’ என்று உற்சாகத்தோடு கேட்டாராம்! உடனே, ‘நோ! மை சன் ஈஸ் கமல்!’ என்று கூறி, அங்கு நின்றிருந்த எல்லோரையும் அசர வைத்திருக்கிறார் சீனிவாசன்.
“நீங்க கமல் அப்பா இல்லே! உங்க மகன்தான் கமல்னு இந்த இரண்டு மணி நேர உரையாடல்ல நிரூபிச்சிட்டீங்க” என்று சொல்லிக் கொண்டு விடை பெறுகின்றோம். மழலையாய்ச் சிரித்து, மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கின்றார்.
டைரக்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்: விழுதை இறக்கி விளம்பரப்படுத்தி விட்டு ஒதுங்கியிருக்கின்ற ஆலமரத்தின் ஆற்றல் பெரியது. ‘சங்கராபரணம்’ சோமயாஜுலுவை விழுங்கி விடக் கூடிய ஒரு திறமை பரமக்குடியில் பதுங்கிக் கொண்டிருக்கிறது. இனியும் தாமதிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
பேட்டி: நெல்லை. குரலோன்
வண்ணப்படங்கள்: ஏ.வி. பாஸ்கர்