மெல்ல வளரும் ஆம் ஆத்மி… தேசியக் கட்சி அங்கீகாரம் பெறும் முனைப்பில் குஜராத்தில் களம்காணும் கெஜ்ரிவால் படை!

மாற்று அரசியல்: த
மிழகத்தில் எப்படி திமுக, அதிமுகவோ, அதே போன்றுதான் தேசிய அரசியலில் பாஜக, காங்கிரஸ். நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸுக்கு இன்று 100 எம்பிக்கள் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் தேசிய அரசியல் சக்கரம் இவ்விரு கட்சிகளை மையமாக கொண்டுதான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

காங்கிரஸ், பாஜக என்ற இருதுருவ அரசியலுக்கு மாற்றாக வேறெந்த கட்சியும் இல்லையா? இந்தக் கட்சி இல்லையென்றால் அந்தக் கட்சி; அந்தக் கட்சி இல்லை என்றால் இந்தக் கட்சி.. இப்படி மாறி மாறி வாக்களிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லையா? என்று மாற்று அரசியலை எதிர்பார்த்து ஏங்கி தவிப்பவர்களுக்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்து கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. இக்கட்சியின் மாற்றத்துக்கான அரசியலுக்கு நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவு இருப்பதை ஆம் ஆத்மியின் சீரான வளர்ச்சியே உணர்த்துகிறது.

பஞ்சாப்பில் கணக்கு தொடக்கம்:
அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்த அரலிந்த் கெஜ்ரிவாலை தேசிய ஒருங்கிணைப்பாளராக கொண்டு 2012 நவம்பரில் உதயமான ஆம் ஆத்மி கட்சி. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் 4 எம்பிக்களுடன் தேர்தல் அரசியலில் தமது கணக்கை தொடங்கியது.

ஆழிப்பேரலை வெற்றி:
அதனைத் தொடர்ந்து 2015 டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, இந்திய அளவில் மாற்றத்துக்கான அரசியலை தலைநகரில் அன்று தொடங்கியது. அதுநாள்வரை தொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்து வந்த காங்கிரஸையும், காங்கிரஸை டெல்லியிலும் காலி செய்ய துடித்துக் கொண்டிருந்த பாஜகவை வாஷ் அவுட் செய்து, முதல்வர் நாற்காலியில் கெத்தாக அமர்ந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அன்று முதல் இன்று வரை தலைநகரில் ஆம் ஆத்மியை பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளாலும் ஒன்று செய்ய முடியவில்லை.

பஞ்சாப்பிலும் அமோகம்:
டெல்லி வாழ் மக்களுக்கு தரமான கல்வி, சிறப்பான மருத்துவம் என ஒரு ஆகச் சிறந்த அரசு செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்துவரும் அரவிந்த் கெஜ்ரிவால், மணீ,ஷ் சிசோடியா கூட்டணியை கண்டு வியந்த அண்டை மாநிலத்தவர்களான பஞ்சாப் மக்கள், எங்கள் மாநிலத்துக்கு வாங்க… நல்லாட்சி தாங்கன்னு, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றியை பரிசளித்தனர். அங்கு மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளை அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் என போட்டியில் இருந்த அனைத்துக் கட்சிகளையும் இருக்கும் இடம் தெரியாமல் செய்தது.

கோவாவிலும் கால்பதித்தது:
அதேசமயம் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஆம் ஆத்மிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், 6.77% வாக்குகளுடன் இரண்டு எம்எல்ஏக்களையும் ஆத் ஆத்மி அங்கு பெற்றுள்ளது. இதனையடுத்து கோவாவில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மிக்கு அளித்துள்ளது.

தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை நோக்கி:
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி… கோவாவில் மாநில கட்சிக்கான அங்கீகாரம்… இந்த அடையாளங்களுடன், விரைவில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறது ஆம் ஆத்மி. மோடி. அமித் ஷாவின் கோட்டையான குஜராத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுவிட்டால் தேசியக் கட்சி்க்கான அங்கீகாரம் கிடைத்துவிடும். இந்த அங்கீகாரத்தை ஆம் ஆத்மி பெற குஜராத் மக்கள் காரணமாக இருந்தால் அதுவே தேசிய அரசியலில் மாற்றத்துக்கான அடுத்தகட்டமாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.