“ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்கவில்லையெனில் உணவு தானியம் கிடையாதா..?" – பாஜக எம்.பி காட்டம்

மத்திய அரசு இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருக்கிறது. இதற்காக அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக தேசியக்கொடி தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பா.ஜ.க-வினர் தபால் நிலையங்களில் தேசியக்கொடியை வாங்கிக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ரேஷன் கடைகளிலும் தேசியக்கொடியை விற்பனைசெய்ய ஆரம்பித்துள்ளனர்.

தேசியக்கொடி

ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில், உணவு தானியம் வாங்கவருபவர்கள் கட்டாயம் ரூ.20-க்கு தேசியக்கொடியை வாங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரேஷன் கடை ஊழியர் உணவு தானியம் வாங்கவரும் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் “ரூ.20-க்கு தேசியக்கொடி விற்கவேண்டும் என்று எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது” என்கிறார். மேலும், “தேசியக்கொடி வாங்காதவர்ளுக்கு உணவு தானியம் விற்பனை செய்யவேண்டாம்” என்று எங்களுக்கு உத்தரவுவந்திருக்கிறது. மேலிடத்து உத்தரவை அமல்படுத்துகிறோம்” என்று அந்த வீடியோவில் பேசுகிறார்.

பாஜக எம்.பி வருண் காந்தி

இந்த வீடியோ வைரலானவுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ரேஷன் அதிகாரி அனிஷ் யாதவ் அளித்தப் பேட்டியில், “மக்களின் வசதிக்காகத்தான் ரேஷன் கடையில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. விருப்பப்படுபவர்கள் அவற்றை வாங்கிக்கொள்ளலாம். கட்டாயப்படுத்தி வாங்கச் சொன்னால் அது குறித்து புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கடை

இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி.வருண் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தேசியக்கொடியை வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்படி தேசியக்கொடியை வாங்காதவர்களுக்கு உணவு தானியம் மறுக்கப்படுகிறது. 75-வது சுதந்திர தின விழா ஏழைகளுக்கு சுமையாக மாறியிருப்பது துரதிஷ்டவசமானது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் இருக்கும் தேசியக்கொடிக்கான ஏழைகளின் உணவைப் பறிப்பது வெட்கக்கேடானது” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.