வட இந்தியாவில் தனித்துவிடப்பட்ட பாஜக: தேஜஸ்வி யாதவ் பேச்சு!

பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் நேற்று லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் நிதிஷ்குமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பீகாரில் பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் முதல்வராக நிதிஷ்குமாரை ஏற்கிறார்கள். எங்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் அனைவரும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலை பிகாரில் செயல்படுத்தக்கூடாது என்று விரும்பினோம்.

என் தந்தை லாலுஜி அத்வானியின் ரத யாத்திரையை பீகாரில் தடுத்து நிறுத்தினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பீகாரில் மட்டுமல்ல நாடு முழுதும் மாநிலக் கட்சிகளை சிதைத்துவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். ஆனால் இதை பீகார் மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாநிலக் கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் செயல்பாட்டுக்கு கிடைத்த பதில்தான் இன்று பீகாரில் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருப்பது.

இன்று பிகாரில் மட்டுமல்ல வட இந்தியா முழுவதும் பாஜக தனித்துவிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் தவிர பஞ்சாப், இமாசலபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த கூட்டணிக் கட்சியும் இல்லை. பாஜக விரைவில் நாடு முழுதும் தனித்துவிடப்படும்.

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் நீடிப்பார். அவர் பீகார் மற்றும் பீகார் மக்களின் நலனுக்காக முன்னுதாரணமான பணிகளைச் செய்துள்ளார். அவர் செய்த பணிகளை யாரும் மறக்க மாட்டார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பதைப் போல எங்களுக்கும் தகராறுகள் இருந்தன. இப்போது அவற்றை மறந்துவிடுங்கள். மாமாவும் மருமகனும் ஒன்றாக கைகோர்த்து பீகாரின் சாமானிய மக்களின் நலனுக்காக பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.