ஏர்வாடி அருகே பேருந்து வசதி இல்லாமல் பரிதவிக்கும் 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள்… ஆட்டோவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்து பள்ளி செல்லும் மாணவர்களின் அவல நிலையை இத்தொகுப்பில் காணலாம்.
ராமநாபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சேரந்தை, கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சேனான்குறிச்சி, அடஞ்சேரி, கல்பார், ஆதன்சேரி, பிச்சப்பன் வலசை, மூக்கன்வலசை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமத்திற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் நாள்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏர்வாடியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் சாலை வழியாக காலை 8 மணிக்கு மட்டும் ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் மற்ற நேரங்களில் பேருந்து வசதிகள் இல்லாமல் அங்குள்ள மக்கள் ஆட்டோவிற்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து அன்றாட அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 15 முதல் 20 மாணவ, மாணவிகள் படித்து வரும் இந்த சூழ்நிலையில் ஒரு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஆட்டோவிற்கு கொடுத்து ஆபத்தான முறையில் அதிக மாணவர்கள் ஒரே ஆட்டோவில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். மற்ற ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆட்டோவில் அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலையால் அவர்களது பிள்ளைகள் 12 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றும், மிதிவண்டியில் பயணம் செய்தும் பள்ளி சென்று வருகின்றனர்.
மேலும் தற்போது காலை 8 மணிக்கு இந்த 10 கிராமத்திற்கு ஒருமுறை மட்டும் வரக்கூடிய பேருந்து மாலை நேரத்திலும் இயக்கப்பட்டால் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் இருமுறை இலவசமாக பயணம் செய்து பள்ளிக்கு சென்று வர முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒரு முறை இயக்கப்படுகின்ற பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பயணம் செய்தால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோக்காரர்கள் காலையில் பேருந்தில் பள்ளி சென்ற மாணவர்களை ஏற்றி வர மறுப்பதாகவும் தங்கள் ஆட்டோவில் இரு முறை பயணம் செய்தால் மட்டுமே ஏற்றுவோம் என்று கூறுவதால் காலை ஒரு முறை இயக்கப்படும் பேருந்திலும் பள்ளி மாணவர்கள் பயணம் செய்ய மறுக்கின்றனர். இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் அவசர தேவைகளுக்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கும் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதோடு 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நவீன காலத்தில் பேருந்து வசதி இல்லாமல் உள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் போக்குவரத்து கழக மேலாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது கூடுதலாக பேருந்துகள் வழங்கப்படும் சமயத்தில் அந்த பகுதியில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். இனியாவது இவர்களது அவல நிலையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM