விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து இப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி வன்முறைக் கும்பல் புகுந்து, வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்தது.
இந்த கலவரம் தொடர்பாக 322 பேர் கைது செய்யப்பட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 296 பேருக்கான ஜாமீன் மனு மீதான விசாரணை, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை நள்ளிரவிலும் தொடர்ந்தது. இதில் 64 பேருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 64 பேரும் அவரவர் உள்ளூர் முகவரியில் உள்ள பிராந்திய எல்லையில் வரக்கூடிய குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் விடுமுறை நாட்கள் உள்பட மறு உத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் என இரு வேளையும் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும், மறு உத்தரவு வரும் வரை அவரவர் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் 10 மரக்கன்றுகளை நட்டு, அதை புகைப்படமாக எடுத்து குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.