ஸ்டாலினுக்காக செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்; தெறிக்கப் போகும் கோவை!

தமிழக முதல்வர்

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை கோவைக்கு வரவுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் 23ஆம் தேதி கோவை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று இரவு விடுதியில் தங்குகிறார். மறுநாள் 24ஆம் தேதி காலை கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, 82 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதையடுத்து மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெறவுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். அங்கு வந்து பாருங்கள். மேடையில் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள். யாரெல்லாம் மேடையின் முன்பு இருக்கிறார்கள் என்று. அப்போது தான் உங்களுக்கு தெரியவரும் என்று சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார்.

இதனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கியப் புள்ளிகள் யாராவது திமுகவில் இணையப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில்

மாவட்ட செயலாளர்கள் தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. தற்போது அமைப்பு ரீதியாக 5ஆக இருக்கும் கோவையை 3ஆக ஒருங்கிணைக்கும் திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதில் யாருடைய பதவிக்கு வேட்டு, புதிதாக யாருக்கெல்லாம் வாய்ப்பு என அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. இத்தகைய சூழலில் முதல்வரின் கோவை வருகை மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. முன்னதாக கோவை நவ இந்தியா அருகேவுள்ள தனியார் ஓட்டலில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். அப்போது, திமுகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது, தீவிர களப்பணி ஆற்றுவது உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு திமுக பாசறை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்வர்.

அதுமட்டுமின்றி கோவை மாவட்ட திமுக அலுவலகம் சிறியதாக இருப்பதால், அதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு, அவிநாசி சாலையில் புதிய மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடத்திற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.