மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான அரசில் நேற்று 18 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவரான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 18 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் பாஜகவில் 9 பேரும், ஏக்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகினர். நேற்ற அமைச்சரவை பதவியேற்பு மட்டுமே நடந்த நிலையில், தற்போது அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு விபரங்கள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஷிண்டே அணியின் கட்டுப்பாட்டில் நகர்ப்புற மேம்பாடு, பொது நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி, விவசாயம், தொழில், போக்குவரத்து, மராத்தி மொழி மேம்பாடு, காடுகள் மற்றும் சுற்றுச்சூழல், சுற்றுலா, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், தோட்டக்கலை ஆகிய துறைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜவுக்கு நிதி, உள்துறை. நீர் பாதுகாப்பு, உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, வருவாய், நிதி மற்றும் திட்டமிடல், ஊரக வளர்ச்சி, மின்சாரம், நீர்வளம், வீட்டுவசதி, பொதுப்பணி, பள்ளிக் கல்வி, பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி, சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளின் இலாகா ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.