அதற்குள் அடுத்த சர்ச்சையா! இலங்கை விரையும் பாக். போர்க்கப்பல் – வலுக்கும் எதிர்ப்பு

சீன கடற்படையின் உளவு கப்பலான யுவான் வாங் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச இலங்கை அனுமதிக்க கூடாது என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு செல்வது அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தைமூர் என அழைக்கப்படும் இந்த பாகிஸ்தான் நாட்டு போர் கப்பல் சீனாவில் கட்டுமானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா நாட்டிலிருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கும் தைமூர் கப்பல், பங்களாதேஷ் நாட்டில் உள்ள சட்டோகிராம் என்கிற துறைமுகத்தில் நிறுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால் வங்கதேசம் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு, தைமூர் கப்பலை கொழும்பு அருகே உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கூறியுள்ளது. இலங்கை அரசு தைமூர் போர்கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாலும், சீன நாட்டின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வருவதாலும், பாகிஸ்தான் போர்க்கப்பலை இந்திய எல்லை அருகே உள்ள இலங்கை நாட்டில் நிறுத்தக்கூடாது என எதிர்ப்பு வெடித்துள்ளது.
ஏற்கனவே இதேப் போன்ற எதிர்ப்பு காரணமாக, சீன கடற்படையை சேர்ந்த யுவான் வாங் உளவுகப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் அனுமதிக்கக் கூடாது என இந்திய அரசு தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அரசு யுவான் வாங் ஒரு கப்பலுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மறுபரிசீலனை நடைபெறும் என சீனா அரசுக்கு தெரிவித்தது.
image
இலங்கை அரசின் மறுபரிசீலனையால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. இந்தியா தேவையில்லாமல் இலங்கை மீது அழுத்தம் உண்டாக்குகிறது என சீன அரசு குற்றம் சாட்டி உள்ளது. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதையும், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதையும் இந்தப் பிரச்சனையின் மையமாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அம்பன்தோட்டா துறைமுகம் கொழும்பு நகருக்கு அருகே அமைந்துள்ளதால், அங்கிருந்து தென்னிந்தியாவில் உள்ள இந்திய பாதுகாப்பு தளங்களை உளவு பார்க்க சீன அரசு யுவான் வாங் உளவுகப்பலை பயன்படுத்தலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அம்பன்தோட்டா துறைமுகத்தை சீன நிறுவனங்களிடம் இலங்கை அரசு ஒப்படைத்தபோது அந்த முடிவு கடும் அதிருப்தியை உண்டாக்கியது.
image
இந்நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் தைமூர் போர்க்கப்பல் இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளையலாம் என அச்சம் நிலவுகிறது. தைமூர் போர்க்கப்பல் சீனாவிலேயே கட்டமைக்கப்பட்டது என்றும் அங்கிருந்து அந்தக் கப்பல் மலேசியா சென்றது எனவும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். வங்கதேசம் இந்த போர்க்கப்பலுக்கு அனுமதி அளிக்காததால், அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச அனுமதி கூறப்பட்டுள்ளது என கருதப்படுகிறது.
வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா விரைவில் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதால், சர்ச்சையை தவிர்க்க வங்கதேசம் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகின்றனர். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியா பயணம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டு வரும் நாடுகளின் போர்கப்பல்களுக்கு இலங்கை அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
– புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.