கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை போட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்பாவிகள் என்றும், வேண்டுமென்றே மாட்டி விடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி அவர்களை பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருவதாகவும் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பொய்வழக்கு போடப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் நேற்று மனு அளிக்க வந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வழக்கறிஞர் மில்டன் பல்வேறு விஷயங்களை முன்வைத்தார். இவை ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது, 20க்கும் மேற்பட்டோர் எந்தவித குற்றமும் செய்யாதவர்கள். அவர்கள் TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு எழுத சென்றவர்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள்.
உறவினர்களை சந்திக்க சென்றவர்கள். பிற்பகலிலே கலவரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மாலை வேளையில் வேலைக்கு சென்று திரும்பியவர்கள், சம்பந்தமில்லாத இளைஞர்கள், சாலையில் சுற்றி திரிந்தவர்கள், பெட்ரோல் போடச் சென்றவர்கள் என பலரை பிடித்து கைது செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தலித்கள், வன்னியர்கள், குறும்பர்கள் என ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் குறிவைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் மேல் சாதியை சேர்ந்த சிலரை மட்டும் விடுவித்து விட்டதாக குறிப்பிட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் என்பது வேறு யாரையோ திருப்திப்படுத்த செய்யும் வேலையாக தெரிகிறது. இதற்கு தமிழக அரசு வாய்ப்பு தரக்கூடாது. எனவே அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் பேசுகையில், சிசிடிவி கேமராக்கள், புகைப்படங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை நேரத்தின் அடிப்படையில் காண்பித்தனர்.
வன்முறைக்கும் தங்கள் மகனிற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர். இந்த விவரங்கள் அனைத்தையும் போலீசார், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என பலரை சந்தித்து அளித்துள்ளோம். ஆனால் இதுவரை விடுவிடுக்க மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் வன்முறை சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் சிலரை பிடித்து வந்து கனியாமூர் பள்ளி முன்பு இறக்கி விட்டு விட்டு,
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றதாகவும் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எங்கள் பிள்ளைகளை நம்பி தான் வாழ்வாதாரமே இருக்கிறது. அவர்கள் மீது வழக்குகள் போட்டு இப்படி முடக்கி வைத்துவிட்டால் எதிர்காலமே வீணாக போய்விடும் என்று கண்ணீர் விட்டு கதறினர். எனவே டிஜிபி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.