டேராடூன்,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தனது அதிரடி பேட்டிங் திறமையால் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் பலமாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக ரிஷப் பண்ட் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ரிஷப் பண்ட்-டை விளம்பர தூதராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியதாவது:
ரிஷப் பண்ட் மன உறுதியுடன் தனது இலக்கை அடைந்த விதம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் கிரிக்கெட் உலகில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். அவர் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரை உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதரக கவுரவிப்பது மாநிலத்தில் உள்ள விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் 43.32 சராசரியுடன் 2,123 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் பத்து அரைசதங்கள் அடங்கும்.