புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடு நேற்று மாநிலங்களவை அதிகாரிகளைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மாநிலங்களவை அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்த அவர் சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார். கடந்த 5 ஆண்டு காலத்தில் தன் மீது அதிகாரிகள் காட்டிய அன்பையும், அக்கறையையும் நினைவு கூர்ந்து அவர்களைப் பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் 5 ஆண்டு காலம் பணி யாற்றிய அதிகாரிகள் அவருடைய பணிக் காலத்தில் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தனர்.இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் தனது நினைவாக சீதா அசோகமரக் கன்றை வெங்கய்ய நாயுடு நட்டார்.
இதைப் போலவே நாடாளுமன்ற கட்டிடத்தின் முற்றம் அமைந்துள்ள பகுதியிலும் அசோக மரக்கன்றை அவர் நட்டார்.
அப்போது அவர் கூறும்போது, “இந்திய நாட்டு பாரம்பரியத்தில், ஒரு மரம் பல மகன்களுக்கு சமமாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் மரங்களின் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கர், நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக டெல்லியில் நடக்கும் விழாவில் இன்று பதவியேற்கிறார்.