பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன். வட கொரியாவில் கிம் தான் சர்வாதிகார தலைவர். அவர் உத்தரவுப்படி மட்டுமே அனைத்தும் இயங்கும். அங்கே வெளிநாட்டு ஊடகங்கள் செயல்பட அனுமதியில்லை. ஆகையால் கேசிஎன்ஏ (KCNA) எனப்படும் அரசு ஊடகம் வெளியிடும் தகவல் தான் கிடைக்கக்கூடிய ஒரே ஆதாரம்.
இந்நிலையில் KCNA கேசிஎன்ஏ ஊடக செய்தியில், வட கொரியா கரோனாவை வென்றுவிட்டதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக அந்நாட்டு சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகளுடன் கிம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரிகிறது.
உலகை கரோனா அச்சுறுத்தத் தொடங்கியதில் இருந்தே வட கொரியா தன்னை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.
இருப்பினும் எந்த தளர்வுகளும் இல்லாமல் வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. தடுப்பூசிகளுக்கும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் வட கொரியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்தது. கரோனா பரிசோதனைகளுக்கு போதிய ஆய்வுக்கூட வசதி இல்லாததால், வட கொரியா கரோனா நோயாளிகளைக் கூட காய்ச்சல் நோயாளிகள் என்று பட்டியலிட்டு அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தது. இந்நிலையில் அங்கு கடந்த ஜூலை 29ஆம் தேதிக்குப் பின்னர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
இது குறித்து கிம், “நம் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. மீண்டும் ஒருமுறை நாம் இந்த உலகிற்கு நமது சிறப்பை உணர்த்தியுள்ளோம். நம் மக்களின் அசைக்கமுடியாது உறுதிக்கு எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார். கிம் உரைக்குப் பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வெற்றி முழக்கமிட்டனர். பின்னர் கிம்முடன் அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கடந்த மே மாதம் முதல் வட கொரியாவில் 48 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. 74 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவில் தான் உலகிலேயே மிகவும் மோசமாக சுகாதார கட்டமைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கே மருத்துவமனைகளில் நவீன சாதனங்கள் இல்லை, ஐசியு.,க்கள் வசதிகள் இல்லை என்றும் கரோனா சிகிச்சைக்கான மருந்தோ, தடுப்பூசிகளோ போதிய அளவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.