கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு கே.ஏ நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கழிவுநீர் கால்வாயின் இரு பக்கவாட்டிலும் சுவர்களை அமைத்த ஒப்பந்ததாரர், கால்வாயின் கீழ்ப்பகுதியில் கான்கிரீட் போடாமல் அப்படியே விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று கே.ஏ நகருக்கு வந்த ஒப்பந்ததாரர் தலைமையிலான கட்டுமான ஊழியர்கள், அவசரகதியில் கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவுநீரை வெளியேற்றாமல் அப்படியே கான்கிரீட் கலவையைக் கால்வாய்க்குள் கொட்டியிருக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பகுதி மக்கள் சிலர் கால்வாயில் கழிவுநீரிலேயே கான்கிரீட் கலவைக் கொட்டப்பட்டதை தங்கள் செல்போனில் வீடியோ பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
இந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், தி.மு.க நிர்வாகிகளும் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். மேயர் கவிதா, நகராட்சி பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குறிப்பிட்ட கால்வாயை ஆய்வுசெய்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி செயலாளர் சக்திவேல், “அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவரால் பரப்பப்பட்ட பொய்யான தகவல் இது. தி.மு.க ஆட்சிமீதும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிமீதும் அவதூறு பரப்பவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடு திட்டமிட்டு இந்த வீடியோ பரப்பப்பட்டிருக்கிறது. அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய் தரமாக அமைக்கப்பட்டு வருகிறது. வதந்திகளை நம்பவேண்டாம்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடம் கேட்க முயன்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர்கள், மக்களையும் பேசவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தி.மு.க-வினர் அங்கிருந்து களைந்து சென்றபிறகு, நாம் அந்தப் பகுதி மக்களிடம் இது குறித்து விசாரித்தோம். “மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. அலட்சியப் போக்குடன் அவசரகதியில் இப்படி கழிவுநீரிலேயே கான்கிரீட் கலவையைக் கொட்டியிருக்கிறார்கள். ஒப்பந்ததாரர் கால்வாய் பணிகளை நேரில்கூட வந்து பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்றனர்.