2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களான சுலேமான் பலூச் மற்றும் நசீர் உல்லா ஆகியோர் காணாமல் போயுள்ளனர். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்த இருவரும் பயிற்சியாளரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்கள் திரும்பவில்லை.
கடைசியாக அவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க் கிழமை காலை சிற்றுண்டியின்போது, சக வீரர்களைச் சந்தித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன்பின் அவர்களைக் காணவில்லை.
இதை அறிந்த அதிகாரிகள் அவர்களது அறைக்குச் சென்று பார்த்தபோது, அறை பூட்டப்பட்டிருந்தது. எனவே அதிகாரிகள் இருவரது அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அவர்களது உடைமைகள் மட்டுமே அங்கு இருந்துள்ளன.
இதுபற்றிக் கூறிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயலாளர் நசீர் டாங், “இருவரின் ஆவணங்களையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இதுபற்றி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். விரைவில் இருவரையும் கண்டுபிடிப்போம்” என்று கூறினார். இதற்கிடையே காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை வீரர்களில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் 3 பேரை போலீசார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது காணாமல்போன இரண்டு பாகிஸ்தான் வீரர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்ற வீரர்கள் பாதுகாப்புடன் இன்று நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன என்று கூறப்படுகிறது.