மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பீர்பும் மாவட்டத் தலைவராக இருந்து வருபவர் அனுப்ரதா மோண்டல். இவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பீர்பும் நகரில் உள்ள போல்பூர் பகுதியில் அமைந்த மோண்டலின் இல்லத்திற்கு இன்று காலை குழுவாக வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கால்நடை கடத்தல் வழக்கு தொடர்பாக அவரை அதிரடியாக கைது செய்தனர். இதற்காக அந்தப் பகுதி முழுவதும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அனுப்ரதா மோண்டலை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர்.
கால்நடை கடத்தல் வழக்கில் கடந்த 5-ந்தேதி மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுப்ரதா மோண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
முன்னதாக மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் ரூ.20 கோடிக்கும் கூடுதலான பணபரிமாற்றங்கள் நடந்தது பற்றிய விசாரணையில், முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் மற்றும் நடிகையான ஆர்பிடா முகர்ஜியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் அடுத்த அதிரடியாக முதல்வரின் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மதன் மித்ரா “அனுப்ரதா மோண்டல் சி.பி.ஐ. அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது அறிந்தேன். இது ஒரு சென்சிடிவ் விஷயம். செய்தி தொடர்பாளர் மட்டுமே கருத்து தெரிவிக்க அதிகாரம் பெற்றவர். ஊழலை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்துள்ளார். பார்த்தா சட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கைது நடவடிக்கை கொடுத்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மால்வியா, “மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுப்ரதா மோண்டல் போன்ற குற்றவாளிக்கு ஆதரவளிக்கிறார். மேற்கு வங்கத்தில் முதலமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் உள்ள மம்தா பானர்ஜி குற்றம் மற்றும் முக்கிய நபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுக்கு அவர் ஆதரவு மற்றும் பாதுகாப்பு வழங்குகிறார்” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM