சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த கிசான் ட்ரோன் வாங்க, விவசாயிகளுக்கு கடனுதவி அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வான்வழி புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு, நில ஆய்வு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், விவசாயப் பணிகளிலும் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. வெளிநாட்டு ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து, உள்நாட்டு ட்ரோன்களின் உற்பத்தியைப் பெருக்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தற்போது முதல்முறையாக விவசாயத்தில் ட்ரோன்களுக்கென மத்திய அரசு கடனுதவி அறிவித்துள்ளது. பயிர் வகைகளை மதிப்பீடு செய்தல், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலத்தில் விளைபொருட்களை வயல்களில் இருந்து, ட்ரோன் மூலம் சந்தைக்கு அனுப்பவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கிசான் ட்ரோன் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 100 கிசான் ட்ரோன்கள், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 100 கிராமங்களில் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டன.
கிசான் ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ட்ரோன் வாங்க மத்திய அரசு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடன் திட்டத்துக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் கிசான் ட்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த ட்ரோனை ஆய்வு செய்து, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
அவ்வகையில், விவசாய சேவையில் ஈடுபடும் ராம்குமார் என்பவருக்கு முதன்முதலாக மத்திய அரசு ரூ.9.37 லட்சம் கிசான் ட்ரோன் கடனுதவி வழங்கியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “கருடா ஏரோஸ்பேசின் கிசான் ட்ரோன் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ட்ரோன் ஒரு நாளில் 25 ஏக்கரில் பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளைத் தெளிக்கிறது. இதன் மூலம் 70 சதவீதம் வரை மருந்துகளும், 80 சதவீதம் தண்ணீரும் மீதமாகிறது” என்றார்.
விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்களை வாடகைக்கு விடுபவர்களுக்கும், கருடா ஏரோஸ்பேஸ் கிசான் ட்ரோனை வாங்க வங்கிகளில் எளிதாகக் கடன்களை பெற மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
“கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே 2,500 ட்ரோன்களை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 2024-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கிசான் ட்ரோன்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தை தொடர்ந்து, மேலும் பல ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களும் கிசான் ட்ரோன் கடனுதவிக்கான அனுமதியைப் பெறமுயற்சித்து வருகின்றன. தற்போது,ஒரு சில வங்கிகளில் மட்டும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்களை வாங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விரைவில் அனைத்து வங்கிகளும் இணையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.