சட்ட விரோதமாக கம்பி வேலியில் பாய்ச்சப்பட்டதா மின்சாரம்? தனியார் தோட்டத்தில் புள்ளிமான் பலி

தனியார் நர்சரி தோட்டத்தின் வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழந்தது. சட்ட விரோதமாக கம்பி வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இறந்ததா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான நர்சரி தோட்டத்தில் ஆண் புள்ளி மான் ஒன்று அங்கிருந்த நைலான் வேலியில் சிக்கி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் கல்லார் ரயில்வே கேட் அருகே தனியாருக்கு சொந்தமான நர்சரி தோட்டம் இயங்கி வருகிறது. வனத்தை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ள இந்த நர்சரிக்குள் யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதை தடுக்க தோட்டத்தைச் சுற்றி நைலான் வலை வேலி மற்றும் சோலார் மின் வேலி என இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கபட்டுள்ளது. இன்று இவ்வழியே வந்த நீண்ட கொம்புகளுடன் கூடிய ஆண் புள்ளி மான் ஒன்று இவ்வேலிகளை கடந்து செல்ல முயன்றபோது அதில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளது.
image
இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் மானின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மானின் இறப்பிற்கு சோலார் மின் வேலி கம்பிகளில் சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்ட உயரழுத்த மின்சாரம் காரணமா அல்லது நைலான் வேலியில் சிக்கியதால் தப்பிக்க இயலாமல் உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானின் உடற்கூறு ஆய்விற்கு பின்னர் கிடைக்கும் மருத்துவ அறிக்கையின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.