ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் அரச சொத்துகள் கையகப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தவிர வேறு யாரும் முக்கியத் தடையாக இல்லை என அந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எவரையும் கைது செய்வதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைவதற்கு முன்னர் அவர்களை சுட வேண்டாம் என சரத் பொன்சேகா இராணுவத்திற்கு அறிவித்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சரத் பொன்சேகாவின் தலையீடு நாட்டுக்கு இவ்வளவு அழிவை ஏற்படுத்தியதாகவும் அதனால்தான் பொன்சேகா உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.