TN governor RN Ravi announced essay competition prizes: நமது நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிறைவையொட்டி, தமிழக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி பரிசுகள் அறிவித்துள்ளார்.
நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி ஆளுனர் ஆர்.என்.ரவி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: பி.எஸ்.சி நர்சிங் vs பி.பார்ம்; எது பெஸ்ட் கோர்ஸ்?
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ‘நான் விரும்பும் சுதந்திரப்போராட்ட வீரர்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர். கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் ‘2047-ல் இந்தியா’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினர்
இந்த கட்டுரைகளை மதிப்பிடும் நடுவர்களாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறவனத்தின் இயக்குனர் ஆர்.சந்திரசேகரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படுகிறது.
பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மொத்தம் 12 மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுத்தொகை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil