ஸ்ரீநகர் / மதுரை: ஜம்மு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாமுக்குள் நேற்று 2 தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் தர்ஹால் பகுதியில் பர்கல் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. நேற்று காலை 2 தீவிரவாதிகள் ராணுவ முகாமின் வேலியை கடக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர்கள் சுபேதார் ராஜேந்திர பிரசாத், மனோஜ் குமார், தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த வீரர் டி.லட்சுமணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். லேசான காயம் அடைந்த மற்றொரு அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதியில் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங் தலைமையில் தீவிர தேடுல் வேட்டை நடக்கிறது.
இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என காஷ்மீர் டிஜிபி தில்பங் சிங் கூறியுள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு 4 நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளனர் என காஷ்மீர் ஏடிஜிபி முகேஷ் சிங் தெரி வித்துள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.
மதுரை கொண்டுவர ஏற்பாடு
தீவிரவாத தாக்குதலில் மதுரை வீரர் டி.லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்துப்பட்டி அருகில் உள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன். அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்துவருகின்றனர்.
து.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜ் – ஆண்டாள் தம்பதியரின் மகன்கள் ராமன், லட்சுமணன். இவர்கள் இரட்டையர்கள். இதில் பட்டப்படிப்பு முடித்த லட்சுமணன், 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லட்சுமணனின் மறைவு செய்தியால் புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
முதல்வர் நிதியுதவி
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று(நேற்று) அதிகாலை காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தாய்நாட்டை காக்கும் அரிய பணியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, வீரமரணம் எய்திய வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக் கின்றேன்.
இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.