புதுடெல்லி: அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக கூறி ரூ.3 கோடி வசூலித்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்,’ என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட வேண்டும்,’ என கோரினார். அதை கேட்ட தலைமை நீதிபதி, ‘கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் அதனை பரிசீலனை செய்து பட்டியலிட்டு விசாரிக்கிறோம்,’ என தெரித்தார். இதையடுத்து, உடனடியாக மனு அளிக்கப்பட்டது.