தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், 15-க்கும் அதிகமான குழிகள் அமைக்கப்பட்டு, அதில் 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு நடைபெறும் அகழாய்வுப் பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், பழங்கால கல்வட்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. அத்துடன், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலத்தால் ஆன பொருட்கள், சங்கு பொருட்கள், நெல் மணிகள் போன்றவை கண்டறியப்பட்டன.
இந்நிலையில், முதல் முறையாக தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.