தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இதற்காக தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பாஜ ஆளும் அரியானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் ரூபாய் 20 கொடுத்து தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், ரேஷன் கடை ஊழியர் ஒருவர், தேசிய கொடியை ரூ.20 கொடுத்து வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் வாங்க மறுப்பவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாஜ எம்.பி வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், ‘மூவர்ணக்கொடி நமது பெருமை, அது ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் உள்ளது. தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் கொடுக்கும்போது, ​​ஏழைகள் மூவர்ண கொடிக்கு 20 ரூபாய் கேட்கப்படுவது வெட்க கேடானது. மூவர்ண கொடியுடன், பாஜ அரசு நம் நாட்டின் ஏழைகளின் சுயமரியாதையையும் தாக்குகிறது’ என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், தேசிய கொடி விற்பனை தொடர்பாக விற்பனையாளர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. தேசிய கொடி வாங்குமாறு நுகர்வோரை வலியுறுத்த கூடாது. இதனை உறுதிபடுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.